Our Feeds


Tuesday, May 27, 2025

Zameera

கொழும்பு மாநகர சபைக்கான உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது


 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்டு தெரிவாகிய ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து யானை சின்னத்தில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் எங்களுக்கு அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும்  உறுப்பினர்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அந்த உள்ளூராட்சி மன்றங்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு  முடிவடையும் நிலையில் இருக்கிறது. ஒரு சில மன்றங்களின் பெயர் பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறை காரணமாக உறுப்பினர்களை பெயரிடுவது மிகவும் கஷ்டமான நிலையாகும். இதன்காரணமாக கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. என்றாலும் தேர்தலில் அதிக வாக்குகளை பெறுபவர்களை தெரிவுசெய்வதென ஐக்கிய தேசிய கட்சி ஏற்கனவே தீர்மானித்து அறிவித்திருந்தது. அதன் பிரகாரம்  உறுப்பினர்கள் தெரிவாகி இருக்கின்றனர். இதனால் அனுபவமில்லாதவர்களும்  தெரிவுசெய்யப்பட வாய்ப்பு  இருக்கிறது.

இந்த தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு  ஐக்கிய தேசிய கட்சிக்கு  13 உறுப்பினர்கள் தெரிவாகி இருக்கின்றனர். அவர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி இருக்கிறோம். கொழும்பு மாநகரசபையை பொறுத்தவரை ஆட்சியமைப்பதற்கு  எந்த கட்சிக்கும்  பெரும்பான்மை இல்லை. அதனால் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பதற்கே கலந்துரையாடி வருகிறோம். அதேபோன்று  தேசிய மக்கள்  சக்தியும் கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி வருகிறது. அதன் பிரகாரம் தேர்தலில் வெற்றிபெற்ற சுயாதீன குழுக்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.

ஜனாதிபதியை சந்திக்கச்சென்ற சுயாதீன குழுக்களில் ஒருசிலரை தவிர பெரும்பான்மையானவர்கள் எதிர்க்கட்சி ஆட்சியமைப்பதற்கே விருப்பம்  தெரிவித்திருத்திருக்கின்றனர். அதனால் கொழும்பு மாநகர சபையில் எதிர்க்கட்சி ஆட்சியமைக்கவே அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »