Our Feeds


Friday, May 23, 2025

SHAHNI RAMEES

அநுர அரசாங்கம் ஆட்சியமைக்க எமது உறுப்பினர்களின் ஆதரவைக் கோரியமைக்கான ஆதாரம் இருக்கிறது - SLPP

 

அரசாங்கம் உள்ளுராட்சிமன்றங்களில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக, பொதுஜன பெரமுனவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  உறுப்பினர்களுடன் இப்போது இரகசியமாகப் பேசத் தொடங்கியுள்ளது. அது குறித்த ஆதாரங்கள் தம்வசம் இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன தலைமையகத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


அரசாங்கத்தின் திறமையற்ற தன்மை தற்போது ஏற்பட்டுள்ள உப்பு பற்றாக்குறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை பகுதியில் முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.

சுனாமி பேரலையின் போது இலங்கையின் உப்புச் சுரங்கங்கள் அனைத்தும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டாலும், இந்த நாட்டில் உப்புக்குப் பஞ்சம் ஏற்படவில்லை. நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. அவ்வாறெனில் காலநிலை மாற்றம் தொடர்பில் மதிப்பாய்வு செய்து பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி விதிக்கவில்லை என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இறக்குமதி செய்யப்படும் உப்புக்கும் வரி விதித்துள்ளதால், உப்பு விலை நுகர்வோருக்கு கட்டுப்படியாகாத அளவில் உள்ளது. நுகர்வோர் விவகார அமைச்சராக மாறுவேடமிட்டு, இந்த நாட்டில் முந்தைய ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் எப்படி ஆட்சி செய்வது என்று கற்பிக்கச் சென்ற வசந்த சமரசிங்க பொதுமக்களின் கேள்விகளுக்கு ஏன் பதிலளிக்கவில்லை?

அரசாங்கம், பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக, பொதுஜன பெரமுனவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  உறுப்பினர்களுடன் இப்போது இரகசியமாகப் பேசத் தொடங்கியுள்ளது. அது குறித்த ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்ற போதிலும், மனித நேயத்தால் நாம் அதனை வெளியிட விரும்பவில்லை என்றார். 




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »