Our Feeds


Friday, June 6, 2025

Sri Lanka

உக்ரைன் - ரஷ்யா யுத்தம் | இரு தரப்பிலும் 3.5 லட்சம் ராணுவம் பலி - 14 லட்சம் பேர் படுகாயம்.



உக்ரைனில், ரஷ்யா நடத்திவரும் போரில் இரு தரப்பிலும் இதுவரை சுமார் 3.5 லட்சம் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் ‘போர் திட்டம் மற்றும் சர்வதேச ஆய்வு மையம்’ (சிஎஸ்ஐஎஸ்) தெரிவித்துள்ளது.


கடந்த 2022 முதல் நடைபெற்றுவரும் உக்ரைன் போரில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 14 இலட்சம் வீரர்கள் படுகாயமடைந்தனர். இதில் ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை சுமார் 10 இலட்சமாகவும் உக்ரைன் வீரா்களின் எண்ணிக்கை சுமார் 4 இலட்சமாகவும் உள்ளது.


இந்த எண்ணிக்கை, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இரு நாடுகளும் அடைந்துள்ள மிகப் பெரிய போர்க் கள இழப்பாகும்.


காயமடைந்த 10 இலட்சம் ரஷ்ய வீரர்களில் 2.5 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் தரப்பில் 60,000 முதல் 1 இலட்சம் வீரர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.


ஒட்டுமொத்த எண்ணிக்கையில் ரஷ்ய வீரர்களின் உயிரிழப்பு அதிகமாக இருந்தாலும், மக்கள்தொகை அடிப்படையில் உக்ரைன் வீரர்களின் உயிரிழப்பு அதிகம்.


உக்ரைனைவிட பல மடங்கு மக்கள்தொகையைக் கொண்ட ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரியாவும் ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்பிவருகிறது. எனவே வீரர்களின் உயிரிழப்பு ரஷ்யாவை வெகுவாக பாதிக்காது.



போர் முனைகளில் உக்ரைன் வீரர்கள் தங்களைவிட பல மடங்கு எண்ணிக்கையிலான ரஷ்ய வீரர்களை எதிர்கொண்டுள்ளனர். ஒவ்வொரு 2.5 இலட்சம் உக்ரைன் வீரர்களுக்கு எதிராகவும் 4 இலட்சம் ரஷ்ய வீரர்கள் போரிட்டு வருகின்றனர்.


கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு போர் முனைகளில் ரஷ்யாவின் முன்னேற்றம் முழுவதும் நின்றுவிட்டது. மற்ற பகுதிகளிலும் நாளொன்றுக்கு 165 அடி தூரம்தான் ரஷ்யா முன்னேற்றம் கண்டுவருகிறது.


தற்போது உக்ரைனின் 19 சதவீத பகுதியை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. ஆனால், இதில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு ரஷ்யா கைப்பற்றிய பகுதி ஒரு சதவீதத்துக்கும் குறைவுதான். மேலும், கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற உக்ரைன் உள்நாட்டுப் போரின்போது ரஷ்யா கைப்பற்றிய கிரீமியா தீபகற்பமும் (7 சதவீதம்) இதில் அடங்கும்.


அந்த வகையில், 2022ஆம் ஆண்டு போர் தொடங்கியதற்குப் பிறகு உக்ரைனின் வெறும் 12 சதவீத பகுதியைக் கைப்பற்றுவதற்காக ரஷ்யா 2.5 இலட்சம் வீரர்களை இழந்துள்ளது.


மனித உயிரிழப்புகள் மட்டுமின்றி, இந்தப் போரில் ரஷ்யா தனது கருங்கடல் கடற்படைப் பிரிவின் மூன்றில் ஒரு பகுதி கப்பல்களை இழந்துள்ளது.



அத்துடன், உக்ரைன் உளவுப் படை அண்மையில் இரகசியமாக திட்டமிட்டு நடத்திய ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் தொலைதூர குண்டுவீச்சு விமானங்களில் மூன்றில் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவின் முக்கிய தளபதிகளை உக்ரைன் உளவுப் படை குறிவைத்துக் கொன்றுள்ளது.


(பி.பி.சி)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »