சிறைகளில் இருந்து 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தகவல்
இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணையில், ஜனாதிபதி மன்னிப்பு உத்தரவுகளின் கீழ் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாக தெரியவந்துளளது.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர, கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று 57 கைதிகளும், இவ்வாண்டு சுதந்திர தினத்தன்று 11 கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
“தண்டனை பெற்ற வங்கியாளர் ஒருவரின் சட்டவிரோத விடுதலை தொடர்பான தகவல்கள் பரவத் தொடங்கியவுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது. இதில், கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று 57 பேரும், இவ்வாண்டு சுதந்திர தினத்தன்று 11 பேரும் விடுவிக்கப்பட்டது உறுதியானது. இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளுக்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டது,” என அவர் கூறினார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியா, இந்த விசாரணைகள் மற்றும் குழு நியமனம் தொடர்பாக அறிந்திருந்ததாகவும் ருவன் குணசேகர தெரிவித்தார்.
“இந்நிலையில், துஷார உபுல்தெனியா, தண்டனை பெற்ற வங்கியாளரின் விடுதலை சாதாரணமானது மற்றும் நியாயமானது என நீதி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். கைதியின் பெயர் ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இருக்கிறதா என சரிபார்க்காமல், அவர் நியாயப்படுத்தி கடிதம் அனுப்பியிருந்தார். இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களம், அவரை காவலில் எடுத்தது,” என அவர் மேலும் கூறினார்.
2025 வெசாக் தின ஜனாதிபதி மன்னிப்பின் கீழ், தண்டனை பெற்ற வங்கியாளர் டபிள்யூ. எம். அத்துல திலகரத்னவின் விடுதலை சட்டவிரோதமானது எனத் தெரியவந்ததை அடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியாவும், அனுராதபுர சிறைச்சாலை கண்காணிப்பாளரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்தார்.