Our Feeds


Thursday, June 26, 2025

Sri Lanka

கெஹெலிய வழக்கின் சாட்சியாளராக ரணில்!


தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்டோர் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். 

இந்த வழக்கில் சுமார் 350 பேர் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, விஜயதாச ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, ரொஷான் ரணசிங்க ஆகியோர் அடங்குவர். மேலும், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம உள்ளிட்ட வைத்தியர்கள் குழுவும் சாட்சிகளாக உள்ளனர். 

அரசு தரப்பு இவ்வழக்கு தொடர்பாக சுமார் 300 வழக்குப் பொருட்களைச் சமர்ப்பித்துள்ளது. 

தரமற்ற தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். 

இவ்வழக்கை பொது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை விசாரணைக்கு நியமிக்குமாறு சட்டமா அதிபர் முன்னர் தலைமை நீதிபதியிடம் கோரியிருந்தார். அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான மகேஷ் வீரமன், பிரதீப் அபேரத்ன, அமலி ரணவீர ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை தலைமை நீதிபதி நியமித்துள்ளார். 

சட்டமா அதிபர் அந்த நீதிபதிகள் அமர்வு முன் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளைச் சமர்ப்பித்துள்ளார். 

மனித இம்யூனோகுளோபுலின் மற்றும் ரிட்டோப்சிமேப் எனப்படும் மருந்து அல்லாத பொருட்களின் 6,195 குப்பிகளை சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவுக்கு வழங்கியதன் ஊடாக அரச நிதியில் 1.444 பில்லியன் ரூபாயை மோசடி செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும், அந்தப் பணத்தை குற்றவியல் ரீதியாகப் பயன்படுத்தியதாகவும் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் மீது சட்டமா அதிபர் 13 குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »