ஈரானுக்கு நாங்கள் முழு தார்மிக ஆதரவை வழங்குகிறோம்.
ஆனால் இதுவரை எங்களிடம் ஈரான் எந்த வகையான ராணுவ உதவியையும் கேட்கவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷஃப்கத் அலி கான் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஈரான் குறித்த பாகிஸ்தானின் நிலைப்பாடு தெளிவானது மற்றும் வெளிப்படையானது. ஈரானுக்கு நாங்கள் முழு தார்மிக ஆதரவை வழங்குகிறோம்; ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். ஈரான் எல்லையில் உள்ள அகதிகளுக்கு பாகிஸ்தானில் தஞ்சம் வழங்க தெஹ்ரானிடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை. அதுபோல இதுவரை ஈரான் எங்களிடம் எந்த வகையான ராணுவ உதவியையும் கேட்கவில்லை.
தெஹ்ரானில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மற்றும் மஷாத், ஜஹேதானில் உள்ள தூதரகங்கள் பாகிஸ்தான் நாட்டினரை ஈரானில் இருந்து வெளியேற்றுவதில் உதவி வருகிறது. இதுவரை 3,000 பாகிஸ்தானியர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.
