Our Feeds


Tuesday, June 17, 2025

Sri Lanka

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்!


ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், கிளீன் ஸ்ரீ லங்கா என்பது நாட்டில் உள்ள அனைவரினதும் வாழ்க்கை முறையாக  மாற வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி அமைச்சு மற்றும் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தின் அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அதிகாரிகள் தங்கள் அனுபவங்களை உதாரணங்களுடன் பிரதமரிடம் முன்வைத்தனர்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நாங்கள் இப்போது செய்ய முயற்சிப்பது சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. எனவே, இதை இன்னொரு திட்டமாக அவசர அவசரமாக செய்ய வேண்டிய அவசியமில்லை. எமக்கு இன்னும் காலம் இருக்கிறது.

கிளீன் ஸ்ரீ லங்கா என்பது வெறுமனே சுத்தம் செய்வது மட்டுமல்ல. கிளீன் ஸ்ரீ லங்கா என்பது நாம் வாழும் சூழலை, நமது சிந்தனை முறை, அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளுடன் சேர்த்து தூய்மையாக வைத்திருப்பது பற்றியதாகும்.

கிளீன் ஸ்ரீ லங்கா என்பது எம் அனைவரினதும் வாழ்க்கை முறையாக  இருக்க வேண்டும். நமது எதிர்கால சந்ததியினரை, குறிப்பாக மாணவர் சமூகத்திற்கு, அதைப் பழக்கப்படுத்த விரும்புகிறோம், அதனால்தான் பாடசாலைகளுக்கு வாழ்க்கை முறை திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்.

பாடசாலை பிள்ளைகள், பெற்றோர்கள், முப்படைகள்கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்திற்கு தன்னார்வத்துடன் ஆதரவளிக்கும் பல தரப்பினரை ஈடுபடுத்துவதன் மூலம் ஏற்கனவே ஏராளமான திட்டங்கள் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டுள்ளன.

பாடசாலைகளை மையமாகக் கொண்டு இந்த திட்டங்களை அடுத்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களிடம் கொண்டு செல்ல ஊடகங்களின் ஆதரவு தேவை.

அடுத்த முக்கியமான விடயம் என்னவென்றால், தேவைப்படும் போதெல்லாம், பாடசாலை முறைமைக்குள் நாங்கள் செயற்படுத்தும் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தில் விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளின் தேவைகள் குறித்து தொடர்புடைய தரப்பினரிடமிருந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலைப் பெற்றுக்கொள்வதாகும்.

குறிப்பாக, இந்தத் திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் அமைக்கப்படும் கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகளில் மாற்றுத்திறனாளி சமூகங்களின் வசதி மற்றும் தேவைகளுக்கு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் கழிப்பறைகள் உட்பட அனைத்திற்கும் ஒரே மாதிரி பேணப்பட வேண்டும். எல்லா ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்க முடியாது.

பாடசாலைகளில் கிளீன் ஸ்ரீ லங்கா  திட்டத்தை செயற்படுத்தும்போது, சில நேரங்களில் தேவையான நிதியைப் பெறுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இதற்கான தீர்வுகளை விரைவாக வழங்க எங்களால் முடியும்.

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை பாடசாலைகளுக்கு அப்பால் தொழில்நுட்பக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். இது ஒரு தனிநபரையோ அல்லது ஒரு குழுவையோ இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தற்காலிக திட்டம் அல்ல. முழு நாட்டையும் இலக்காகக் கொண்டு நடத்தப்படும் ஒரு பாரிய தேசிய திட்டத்தின் ஆரம்ப கட்டமாகும்.

இந்த அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்டு, நமது தவறுகளையும் குறைபாடுகளையும் சரிசெய்து முன்னோக்கிச் செல்வோம்" என்றார்.

இந்த கலந்துரையாடலில் கல்வி அமைச்சு மற்றும் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »