Our Feeds


Tuesday, June 17, 2025

Sri Lanka

பகிரங்க வாக்கெடுப்புக்கு சென்றிருந்தால் நிச்சயமாக எமக்குத் தான் வெற்றி - ரிஸா சரூக்!


மாகாண ஆணையாளர் ஒருதலைப்பட்சமாக செயற்பட்டு, ரகசிய வாக்கெடுப்புக்கு சென்றதாலே எமக்கு பின்னடைவு ஏற்பட்டது. பகிரங்க வாக்கெடுப்புக்கு சென்றிருந்தால் நிச்சயமாக நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவுக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரிஸா சரூக் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையில் திங்கட்கிழமை (16) மேயர் தெரிவு இடம்பெற்ற பின்னர் அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நூற்றுக்கு 50 வீத வாக்குகள் பெறாத சபை ஒன்றில் மேயர், பிரதி மேயர். தலைவர் மற்றும் பிரதி தலைவர் தெரிவு செய்வது தொடர்பில் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரச நிர்வாக திணைக்களத்தினால் இவ்வாறான சபைகளில் பதவிகளுக்கு ஆட்களை தெரிவு செய்யும்போது அர உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் செயலர்வுகள் நடத்தப்பட்டு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருந்தன. அதன் பிரகாரமே பெரும்பான்மை இல்லாத சபைகளில் மேயர்கள், தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

தேர்தலில் பெரும்பான்மை இல்லாத சபைகளுக்கு மேயர், பிரதி மேயர், தலைவர், பிரதி தலைவர் தெரிவு செய்வதற்கு  உள்ளூராட்சி மன்ற சட்டத்தில் இரண்டு முறைகள் காணப்படுகின்றன. ஒன்று பகிரங்க வாக்கெடுப்பு, மற்றது  ரகசிய வாக்கெடுப்பு. அந்த வாக்கெடுப்பில் எதனை தெரிவு செய்வது என்பதில் பகிரங்க வாக்கெடுப்புக்கே செல்ல வேண்டும். அதுதான் முறை. ஆனால் சபைக்கு தலைமை தாங்கிய மாகாண ஆணையாளர், அரசாங்கத்துக்கு சோரம் போகும்வகையில், ஒருதலைப்பட்சமான தீர்மானத்துடனே சபைக்கு வந்திருந்தார்.

அவர் ரகசிய வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என்றே தெரிவித்து வந்தார். நாங்கள் அரை மணி நேரத்துக்கும் அதிகம் இதுதொடர்பில் வாதிட்டு, அவருக்கு தெரிவித்த போதும் அவர் அவரது நிலைப்பாட்டிலே இருந்து வந்தார். மேயர் வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்புக்கு செல்ல நாங்கள் விரும்பம் தெரிவித்தோம். ஆனால் அது தொடர்பான வாக்கெடுப்பை பகிரங்கமாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டபோதும் அவர் எமது கோரிக்கையை நிராகரித்தார். அதனால், ரகசிய வாக்கெடுப்பின் மூலமே மேயர் தெரிவை நடத்துவதற்கு நாங்கள் சம்மதித்தோம்.

வாக்கெடுப்பில் எமக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துவந்த சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களில் யாராவது மாறு செய்திருக்கிறார்கள். எங்களுக்குள் கருப்பு ஆடுகள் இருந்திருக்கின்றன. இவ்வான விடயங்கள் இடம்பெறுவது சாதாரண விடயமாகும். வாக்களிப்பில்  எமக்கு பின்னடைவு ஏற்பட்டாலும், நாங்கள் எமது பயணத்தில் பின்வாங்கப்போவதில்லை.

வரி செலுத்தும் கொழும்பு மக்களின் நல்ல விடயங்களுக்காக தொடர்ந்தும் பாடுபடுவோம். அதற்காக புதிய மேயர் முன்னெடுக்கும் நல்ல வேலைத்திட்டங்களுக்கு எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆதரவளிப்போம். அதேபோன்று மக்களுக்கு விராேதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அதற்கு எதிராக செயற்படுவதுடன், அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் பின்வாகங்கப்போவதில்லை.

எமக்கு ஆதரவளிப்பதாக 62 பேரின் கையொப்பம் இருந்தது. இதுதொடர்பில் ஜனாதிபதி நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் கலந்துரையாடியுள்ளார். இதன்போது இரகசிய வாக்களிப்புக்கு சென்றால், அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதனால்தான் எப்படியாவது ரகசிய வாக்கெடுப்புக்கு செல்வதென்ற தீர்மானத்திலே அதிகாரிகள் வந்திருந்தனர். பகிரங்க வாக்களிப்பு இடம்பெற்றிருந்தால், நிச்சயமாக 62 பேரும் எங்களுக்கே வாக்களித்திருப்பார்கள். என்றாலும் நாங்கள் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரம் இந்த வாக்களிப்பு தொடர்பான பின்னணியை ஆராய்வோம்.

அதேநேரம் சாதாரண குடும்பத்தைச்சேந்த என்னை மேயர் பதவிக்கு நியமித்து, அதற்காக பாடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கும் என்மீது நம்பிக்கைவைத்து வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

 (எம்.ஆர்.எம்.வசீம்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »