Our Feeds


Tuesday, June 3, 2025

SHAHNI RAMEES

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலையீட்டினால் நாடு திரும்பிய அகதி விடுவிப்பு!

 


விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அகதியை விடுவிக்குமாறு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் வழிகாட்டலுக்கு அமைய குடிவரவுத்திணைக்களத்தினால் நீதிமன்றத்திடம் கோரப்பட்டதற்கு இணங்க, அந்நபர் விடுவிக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, கப்பல் துறை, சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


 இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 75 வயதுடைய நபரொருவர் பலாலி விமானநிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து அந்நபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் 'எக்ஸ்' தளப்பதிவை அடுத்து, இச்சம்பவம் தொடர்பில் தாம் அவதானம் செலுத்தியிருப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார். அதேவேளை இதுகுறித்து பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் கவனம் செலுத்தியிருந்தார்.



 இவ்வாறானதொரு பின்னணியில் மேற்கூறப்பட்ட நபர் திங்கட்கிழமை (2) மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


இதுகுறித்து தனது 'எக்ஸ்' தளப்பதிவில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் வழிகாட்டலுக்கு அமைய குடிவரவுத்திணைக்களத்தினால் அந்நபரை விடுவிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரப்பட்டதாகவும், இவ்விடயத்தில் அமைச்சர்களான ஆனந்த விஜேபால மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் துரித நடவடிக்கைகளைப் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »