Our Feeds


Sunday, June 15, 2025

SHAHNI RAMEES

அரசாங்கம் திட்டமிடுவதைப் போன்று என்னை ஒருபோதும் கைது செய்ய முடியாது! - உதய கம்மன்பில

 

ஜனாதிபதி தனது ஜேர்மன் விஜயத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் நெடியவன் என்பவரை சந்திக்கவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருப்பதாக நான் தெரிவித்திருந்தேன். அதனை அடிப்படையாக்க கொண்டு நான் இனவாதத்தை தூண்டுவதாகக் குறிப்பிட்டு என்னை கைது செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. சிறையிலடைப்பதாகக் கூறியோ சுட்டுக் கொல்வோம் எனக் கூறியோ என்னை அச்சுறுத்தி என் குரலை ஒடுக்க முடியாது என முன்னாள் அமைச்சரும் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

சனிக்கிழமை (14)  கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


ஜே.வி.பி.யின் செயற்பாட்டாளர்களே என்னை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தின் பல்வேறு தவறுகளை நான் ஆதாரத்துடன் நாட்டுக்கு வெளிப்படுத்துவதால் தான் என்னை கைது செய்வதற்கு தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

நான் இனவாதத்தைத் தூண்ட முயற்சித்ததாகக் குறிப்பிட்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சட்டத்தின் கீழ் என்னை கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் நீண்ட காலம் பிணை இன்றி என்னை விளக்கமறியலில் வைக்க முடியும் என்பதே அரசாங்கத்தின் திட்டமிடலாகும். 

அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவே எனக்கெதிராக இரு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் என்னிடம் வாக்குமூலம் பெற்று அதன் பின்னர் கைது செய்வதே இதன் நோக்கமாகும்.

ஆனால் அரசாங்கத்தின் திட்டத்துக்கமைய என்னை கைது செய்ய முடியாது. காரணம் என் மீது அவ்வாறு எந்தக் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை. 

நான் எந்த வகையில் இனவாதத்தை தூண்டியிருக்கின்றேன் என்பதை இவர்கள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்ததாக நான் கூறியதாகத் தெரிவித்தனர். 


ஆனால் இது தொடர்பில் சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்சீவவினால் தான் முதன் முதலில் சந்தேகம் வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி தனது ஜேர்மன் விஜயத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் நெடியவன் என்பவரை சந்திக்கவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருப்பதாக நான் தெரிவித்திருந்தேன். 

இதனை அடிப்படையாகக் கொண்டும் என்னை கைது செய்ய முடியுமா என்று கலந்தாலோசித்து வருகின்றனர். என்னை எவ்வாறு கைது செய்வது என்பது குறித்து சிந்திப்பதை விடுத்து, வெளியாகியுள்ள இந்த செய்திகள் குறித்து உண்மையை வெளிப்படு;த்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

எவ்வாறிருப்பினும் அரசாங்கம் திட்டமிடுவதைப் போன்று என்னை ஒருபோதும் கைது செய்ய முடியாது. நான் ஒரு சட்டத்தரணி என்பதால் மிகுந்த அவதானத்துடன் சொற்களை அல்லது வசனங்களைப் பிரயோகிப்பேன். 

பிள்ளையானைப் போன்று என்னையும் சட்டத்துக்கு விரோதமாக கைது செய்து, மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துவதை தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கக் கூடும். 

உதய கம்மன்பிலவை சிறையிலடைப்பதாவோ சுட்டுக் கொல்வதாகவோ கூறி மிரட்ட முடியாது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தெளிவாகக் கூறிக் கொள்கின்றேன் என்றார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »