நாட்டில் இதற்கு முந்தைய ஆட்சி காலங்களில் பொய்களும் ஊழல் மோசடிகளுமே நடைமுறையிலிருந்ததாக தற்போதைய அரசாங்கம் குற்றஞ்சாட்டியது. ஆனால் அதே முறைமையையே இந்த அரசாங்கமும் பின்பற்றுகின்றது. இதுவா மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட முறைமை மாற்றம்? என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
சனிக்கிழமை (14) அறிக்கையொன்றை வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
நாட்டில் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதியளித்தது. ஆனால் இன்று ஜனாதிபதியின் அனுமதியுடன் கைதிகளை விடுதலை செய்வதற்கான முறைமை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஜனாதிபதி உட்பட பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு கூட தெரியாமல் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவே தகவல்கள் கிடைத்துள்ளன.
துறைமுகத்திலிருந்து சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த 323 கொள்கலன்களும் இவ்வாறு தான் விடுவிக்கப்பட்டுள்ளன. இங்கும் முறைமையில் மாற்றம் ஏற்படவில்லை.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் கைதிகள் யார் என்பது தொடர்பில் ஜனாதிபதிக்கே தெரியவில்லை என்றால், மேற்கூறப்பட்ட 323 கொள்கலன்களில் காணப்பட்ட பொருட்கள் தொடர்பில் இவர்களால் எவ்வாறு பொறுப்பு கூற முடியும்? அந்த பொறுப்பை யார் ஏற்பது?
வரவு - செலவு திட்டத்தில் கூறப்பட்டதைப் போன்று ஓய்வு பெற்றோரின் சேமிப்பு கணக்குக்களுக்கான 3 சதவீத வட்டியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஆனால் இதற்கு முன்னர் சகல அரசாங்கங்களிலும் கட்சி பேதமின்றி ஓய்வு பெற்றவர்களுக்காக 15 சதவீத வட்டி கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் தற்போது அந்த கொள்கை நடைமுறைப்படுத்தவில்லை.
முந்தைய ஆட்சி காலங்களில் பொய்களும் ஊழல் மோசடிகளுமே நடைமுறையிலிருந்ததாக தற்போதைய அரசாங்கம் குற்றஞ்சாட்டியது.
ஆனால் அதே முறைமையையே இந்த அரசாங்கமும் பின்பற்றுகின்றது. இதுவா மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட முறைமை மாற்றம் என அரசாங்கத்திடம் கேள்வியெழுப்புகின்றோம். இனியாவது மக்களை முட்டாள்களாக்குவதை நிறுத்துமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.