பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "கணேமுல்ல சஞ்சீவ"
சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சமிந்து தில்ஷான் பியுமங்க, செவ்வாய்க்கிழமை (04) அடையாள அணிவகுப்புக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.இதன்போது, பூசா சிறைசாலையில் அடைக்கப்பட்டுள்ள பியுமங்க, பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அடையாள அணிவகுப்பிற்கு சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் இருவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பியுமாங்க தான் என்பதை அவர்களால் உறுதியாக அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் பிரதான சந்தேகநபர் தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, ஜூன் 6 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அடுத்த விசாரணைக்கு ஸ்கைப் மூலம் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.
கடந்த பெப்ரவரி மாதம் 19 கொலை வழக்குகள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் நடந்த நேரத்தில் பூசா சிறைச்சாலையிலிருந்து சிறைசாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.