மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தும் வகையில் தனிநபர் பிரேரணை ஒன்றை நான் கொண்டு வந்தேன். இந்த பிரேரணை அரசாங்கம் ஆளும் தரப்பு பிரேரணையாக கருதி சட்டத்திருத்தத்தை விரைவாக மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத் தேர்தலை நடத்தும் திகதியை அரசாங்கம் உறுதியாக அறிவிக்க வேண்டும். என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற விளையாட்டில் ஊக்குப்பதார்த்தப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பிரதான எதிர்க்கட்சி சபை வெளிநடப்பு செய்துள்ள வேளையில் , எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து விசேட அவதானம் செலுத்தி அவற்றை சுட்டிக்காட்டவுள்ளோம். பிரதான எதிர்க்கட்சி சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளமைக்கு ஆளும்கட்சி பொறுப்புக்கூற வேண்டும்.
எ திர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் உரையாற்றுவதற்கு போதுமான காலவகாசம் வழங்கப்படுவதில்லை. ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அல்லது சபை முதல்வர் எழுந்தவுடன் அவர்கள் உரையாற்றுவதற்கு சபாநாயகர் அனுமதியளிக்கிறார். ஆகவே பிரதான எதிர்க்கட்சியின் வெளிநடப்பு நியாயமானதே,
காலம் காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் தொடர்ச்சியாக பேசுகிறோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இளைஞர் யுவதிகள் விளையாட்டுத்துறையில் திறமையுடையவர்களாக உள்ள நிலையிலும் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
சுய முயற்சியின் அடிப்படையில் விளையாட்டுத்துறையில் முன்னேற்றமடைவதற்கு தமிழ் இளைஞர்கள் முயற்சிக்கின்ற போதிலும், அவர்களுக்கு அரசாங்கம் எவ்வித ஒத்துழைப்புக்களையும் வழங்குவதில்லை.
தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் மற்றும் பேச்சுக்களினால் தான் இந்த அரசாங்கம் உள்ளுராட்சிமன்ற சபைத் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 12 உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளில் 11 சபைகளில் எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியமைத்துள்ளன. தேசிய மக்கள் சக்தி ஒரு சபையில் கூட தலைமைத்துவ பதவியை கைப்பற்றவில்லை.
இந்த அரசாங்கத்துக்கு வெட்கம் என்பதொன்று இல்லை என்றே குறிப்பிட வேண்டும், களுவாஞ்சிக்குடி பிரதேச சபையில் ஆட்சியமைக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்த பிரதேச சபையை நாங்கள் கைப்பற்றுவோம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு எங்களால் உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும்.அதற்காகவே அதிகார பகிர்வை கோருகிறோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக அதிகார பகிர்வு என்று அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் இதுவரையில் அதற்குரிய முன்னேற்றகரமான நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் வரையில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்.
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தும் வகையில் தனிநபர் பிரேரணை ஒன்றை நான் கொண்டு வந்தேன். இந்த பிரேரணை அரசாங்கம் ஆளும் தரப்பு பிரேரணையாக கருதி சட்டத்திருத்தத்தை விரைவாக மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். ஆகவே மாகாண சபைத் தேர்தலை நடத்தும் திகதியை அரசாங்கம் உறுதியாக அறிவிக்க வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் காணிகளை வனவளத்துறை திணைக்களம் கையகப்படுத்தியுள்ளது.1985 மற்றும் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியின் காணி வரைப்படத்துக்கு அமைய உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வள வனத்துறை வசமுள்ள பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்றார்.
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)