இலங்கையின் தேசிய சுதந்திர முன்னணி ஐ.நா.வுக்கு கடிதம்: இஸ்ரேல்- ஈரான் மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் என எச்சரிக்கை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி (NFF), இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் அபாயத்தைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு (UN) வேண்டுகோள் விடுத்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் கடிதம் ஒன்றை கையளித்துள்ளது.
ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸுக்கு உரித்தான இந்தக் கடிதத்தில், மோதலால் உலகளாவிய ஸ்திரமின்மை அதிகரித்து வருவதாகவும், இதில் அமெரிக்காவின் பங்கு பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்காவின் நியாயமற்ற இராணுவ நடவடிக்கைகளை விமர்சித்துள்ள கடிதம், உடனடி இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்படாவிட்டால் உலகளாவிய நெருக்கடி ஏற்படும் என எச்சரிக்கிறது.
தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தலைமையில், கட்சி பிரதிநிதிகள் இந்த விரிவான கடிதத்தை ஐ.நா. அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவரவும், மனித பேரவலத்தைத் தடுக்கவும் ஐ.நா. உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.