உறுப்பினர்கள் மாத்திரமின்றி மாகாண ஆணையாளர்கள் சிலரும் பகிரங்கமாக அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஊடாக அரசாங்கம் உள்ளுராட்சிசபைகளில் அதிகாரத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளுராட்சிமன்றங்களில் அதிகாரம் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்னர் சுயாதீன குழுக்களையும் கள்வர்கள் என விமர்த்த தேசிய மக்கள் சக்தி, இன்று அவர்களுடன் இணைந்து சபைகளில் ஆட்சியமைத்திருக்கிறது. குறிப்பாக பல சபைகளில் பல்வேறு ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களுடன் அரசாங்கம் கூட்டணியமைத்திருக்கிறது.
அவ்வாறானவர்களின் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. ரிஷாத் பதியுதீன், ரவுப் ஹக்கீம் போன்றோரது கட்சி உறுப்பினர்களே இவ்வாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
ஹக்கீம், ரிஷாத் எம்முடன் இருக்கின்றனர் என்றால், நாம் அவர்களுக்கு தேசிய பட்டியலில் இடமளித்திருக்கின்றோம் என்றால் அரசாங்கத்துடன் இணைந்துள்ளவர்களை கட்சியிலிருந்து நீக்கி முன்னுதாரணமாக திகழுமாறு வலியுறுத்துகின்றேன். குருணாகல், களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் இவ்வாறான காட்டிக் கொடுப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
உறுப்பினர்கள் மாத்திரமின்றி மாகாண ஆணையாளர்கள் சிலரும் பகிரங்கமாக அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தமது விருப்பத்துக்கு இரகசிய வாக்கெடுப்பினை நடத்துவதற்கு தீர்மானிக்கின்றனர். பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட அனைத்து சபைகளிலும் நாமே வெற்றி பெற்றுள்ளோம். இரகசிய வாக்கெடுப்பின் போது தான் அரசாங்கத்தின் மோசடி வெற்றி பெற்றுள்ளது என்றார்.
(எம்.மனோசித்ரா)