அமெரிக்கா 12 நாடுகளுக்கு எதிராக விதித்த பயணத் தடையில் சாட் நாடும் சேர்க்கப்பட்டதை அடுத்து, அந்நாடு அமெரிக்க குடிமக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது.
சாட் நாட்டின் அதிபர் இத்ரிஸ் டெபி, வியாழக்கிழமை தனது பேஸ்புக் பதிவில் இந்த முடிவை அறிவித்தார்.
இது தொடர்பாக அவர், “பரஸ்பர நட்பு என்ற கொள்கையின் அடிப்படையில், அமெரிக்க குடிமக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்த அரசுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “சாட் நாட்டிடம் வழங்குவதற்கு விமானங்கள் இல்லை, பில்லியன் டாலர்கள் இல்லை, ஆனால் சாட் நாட்டுக்கு அதன் கவுரவமும் பெருமையும் உள்ளது” என்று கூறி, கத்தார் நாடு அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள விமானத்தை பரிசாக வழங்கியதைக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் பயணத் தடையால் பாதிக்கப்பட்ட மற்ற ஏழு ஆப்பிரிக்க நாடுகளுடன் சாட் நாடும் இணைந்துள்ளது.
முன்னாதாக
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி 12 உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு நுழைவதை தடை செய்யும் பிரகடனத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். மேலும், 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், கொங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் யெமன் ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அதேபோல, புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ட்ரம்ப் கையெழுத்திட்ட பிரகடனத்தில், எனது முதல் நிர்வாகத்தின் போது, வெளிநாட்டினர் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைவதை நான் தடை செய்தேன். இது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நமது எல்லைகளை அடைவதை வெற்றிகரமாகத் தடுத்தது.
ஜனவரி 20, 2025 இன் நிர்வாக ஆணை 14161 (வெளிநாட்டு பயங்கரவாதிகள் மற்றும் பிற தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாத்தல்) மூலமாக, நமது தேசிய பாதுகாப்பை அச்சுறுத்த குடியேற்றச் சட்டங்களைப் பயன்படுத்த விரும்பும் வெளிநாட்டினரிடமிருந்து நமது குடிமக்களைப் பாதுகாப்பது அமெரிக்காவின் கொள்கை என்று நான் குறிப்பிட்டேன்.
அதன்படி, அமெரிக்காவில் நுழைய அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டினர் அமெரிக்கர்களுக்கோ அல்லது அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கோ தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்த விசா வழங்கும் செயன்முறையின் போது அமெரிக்கா விழிப்புடன் இருக்க வேண்டும். (ரொய்ட்டர்)