Our Feeds


Friday, June 6, 2025

Sri Lanka

3 ஆயிரம் வாகனங்களுடன் நடுக்கடலில் எரியும் மாபெரும் கப்பல் - மீட்க்க முடியாமல் கைவிட்டது நிறுவனம் - ஏன்?



அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கு அப்பால் கடலில் 800 மின்சார வாகனங்கள் உட்பட சுமார் 3,000 வாகனங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், தீயை அணைக்க முடியவில்லை என்பதால் கப்பலைக் கைவிட்டுள்ளதாக, கப்பலை இயக்கும் Zodiac Maritime நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


கடந்த மே மாதம் 26ஆம் திகதி மொர்னிங் மிடாஸ் என்கின்ற லைபீரியா கொடி ஏற்றப்பட்ட இந்த கப்பல் சீனாவின் யான்டாய் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு மெக்சிகோவின் லாசரோ கார்டெனாஸ் நோக்கி சென்று கொண்டிருந்தது.



இதன்போது, ஆரம்பத்தில் மின்சார வாகனங்கள் நிரப்பப்பட்ட தளம் ஒன்றிலிருந்து தீப்பிடித்து எரிந்து புகை வெளிவந்துள்ளது. கப்பல் எந்த பிராண்ட் வாகனங்களை ஏற்றிச் சென்றது என்பது தெளிவாகத் தெரியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


கப்பல் அலாஸ்காவில் உள்ள அடாக்கிலிருந்து தென்மேற்கே 300 மைல் (482.8 கிமீ) தொலைவில் இருப்பதாக கடலோர காவல்படை அதன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.


கப்பலில் இருந்த 22 பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் உயிர்காக்கும் படகு மூலம் வெளியேற்றப்பட்டு, அமெரிக்க கடலோர காவல்படையுடன் இணைந்து அருகிலுள்ள வணிகக் கப்பலுக்கு மாற்றப்பட்டனர்.



சோடியாக் நிறுவனம் கப்பலை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தி வருவதாகக் தெரிவித்துள்ளது.


கப்பல்களில் மின்சார வாகனங்களினால் ஏற்படும் தீ, வெப்பம் மற்றும் மீண்டும் தீப்பிடிக்கும் அபாயம் இருப்பதால் அணைப்பது சவாலானது, இது பல நாட்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.


நிலைமையை சமாளிக்க விமானக் குழுவினரும் கட்டர் கப்பலும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மூன்று கப்பல்கள் ஏற்கனவே சம்பவ இடத்தில் இருப்பதாகவும் அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.


கடந்த 2022 ஆம் ஆண்டு போர்ஷேஸ் மற்றும் பென்ட்லிஸ் உட்பட 4,000 சொகுசு கார்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று தீப்பிடித்த கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் போர்த்துகீசிய அசோர்ஸ் தீவுக்கூட்டத்தில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »