இலங்கையில் போதைப்பொருளை ஒழிப்பதற்கு ஜூன் 26 ஆம் திகதியிலிருந்து விசேட வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பதில் பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பதில் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் ஆரம்ப காலகட்டத்தில் அதிகளவானோர் கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்தினர்
1981 ஆம் ஆண்டில் இலங்கையில் முதன்முதலில் ஹெரோயின் போதைப்பொருள் அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்பின்னர், 2005 ஆம் ஆண்டில் இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது போதைமாத்திரைகள் பாவனையும் சமூகத்தில் அதிகரித்துள்ளது.
போதைப்பொருள் பாவனை காரணமாக சமூகத்திலும் குடும்பங்களிலும் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இலங்கையை புதிய அரசாங்கம் பொறுப்பேற்றப்பின்னர் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 09 ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 1253 கிலோ ஹெரோயின், 1121 கிலோ ஐஸ், கிலோ 12491 கஞ்சா, 20000 கிலோ கொக்கேயின் மற்றும் 10 இலட்சம் போதைமாத்திரைகள் என்பன பொலிஸார், இராணுவ வீரர்கள் மற்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
எவ்வளவு போதைப்பொருட்களை கைப்பற்றினாலும் சமூகத்தில் போதைப்பொருள் பாவனை குறைவடையவில்லை.
போதைப்பொருளை ஒழிப்பதற்கு கைது செய்தால் மாத்திரம் போதாது போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் பொதுமக்களுக்கும் சிறுவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
போதைப்பொருள் பாவனை காரணமாக சிறுவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் விதங்கள் குறித்து சமூகத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டும்.
இலங்கையில் போதைப்பொருளை ஒழிப்பதற்கு பொதுமக்களின் உதவி மிகவும் அவசியமாகும். எனவே தான் இந்த வேலைத்திட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.
போதைப்பொருள் பாவனை காரணமாக ஏற்படும் விபத்துக்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.