அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு போன்று இலங்கைக்கும் அதிகளவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக அறைகூவல் விடுக்கப்படவேண்டும் என ஏஞ்சலோ மெத்யூஸ் தனது பிரியாவிடை டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஊடகங்கள் மத்தியில் தெரிவித்தார்.
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி காலி சர்வதேச அரங்கில் ஆரம்பமாவதற்கு முன்னதாக திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே ஏஞ்சலோ மெத்யூஸ் இதனைத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் பிரகாசமாக இருக்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு 'எமக்கு மிகக் குறைவான டெஸ்ட்கள் கிடைப்பது கவலைக்குரியதாகும். நேர்மையாகக் கூறுவதென்றால் 2008க்குப் பின்னர் நான் முதல் தடவையாக ஒரு வருடத்தில் நான்கு டெஸ்ட்களில் விளையாடுகிறேன். இது கவலை தருகிறது. இளம் கிரிக்கெட் தலைமுறையினர் இன்னும் அதிகமான டெஸ்ட்கள் வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
ஏனெனில் கிரிக்கெட் வடிவங்களில் டெஸ்ட் கிரிக்கெட்தான் உயரியதாகும். எனவே பல டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இளம் கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கின்றனர். எனவே ஒரு வருடத்தில் 10 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படவேண்டும்.
'இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் வருடத்தில் 15க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. அப்படியானால் எங்களால் ஏன் முடியாது. எங்களாலும் விளையாட முடியும். அதற்காக தொடர்ச்சியாக அறைகூவல் விடுத்தால் அது சாத்தியமாகும்.
நாங்கள் உலகக் கிண்ணங்களை வென்றுள்ளோம். ஒரு நாடு என்ற வகையில் நாங்கள் கிரிக்கெட்டுக்காக எவ்வளவோ செய்திருக்கிறோம். எனவே அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்றே நாங்களும் அதிகளவான டெஸ்ட் போட்டிகளில் விளையாட தகுதி உடையவர்களே' என பிரியாவிடை டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார்.
Tuesday, June 17, 2025
அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்று நாங்களும் அதிக டெஸ்ட்களில் விளையாட தகுதி உடையவர்களே! - மெத்யூஸ்
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »