Our Feeds


Thursday, June 12, 2025

SHAHNI RAMEES

சந்தேகத்தால் பறிபோன ஐந்து பிள்ளைகளின் தாயின் உயிர்!

 

கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்டு காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி நேற்று புதன்கிழமை (11) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் புத்தளம் - சிலாபம் , அம்பகதவில பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தயொருவர் ஆவார். 

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

உயிரிழந்த மனைவி வர்த்தக வளாகம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

தனது மனைவி தன்னுடன் பணிபுரியும் சக ஊழியருடன் தகாத உறவில் ஈடுபட்டிருப்பதாக கணவன் சந்தேகமடைந்துள்ளார்.


இதனால் மனைவிக்கும் கணவருக்கும் இடையில் தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில், கடந்த 06 ஆம் திகதி இரவு 07.30 மணியளவில் வழமை போன்று கணவர் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகராறு எல்லை மீறியதால் கோபமடைந்த கணவன் தனது மனைவியை தீ வைத்து எரித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

காயமடைந்த மனைவி பிரதேசவாசிகளின் உதவியுடன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று புதன்கிழமை (11) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த கணவன் செவ்வாய்க்கிழமை (10) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட கணவன் சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »