தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும்
கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலைசெய்து காட்டுப்பகுதியில் உடலை விட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் குறித்த நபரை உடனடியாக கைதுசெய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் உடல் சின்னபூவரசன்குளத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் அனந்தர்புளியங்குளம் நொச்சிகுளத்தை சேர்ந்த 32 வயதுடைய ஆசிரியை ஒருவரே மரணமடைந்துள்ளார். அவர் கர்ப்பிணி பெண் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர் வவுனியா வடக்கு பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் ஆரம்பபிரிவிற்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.
கணவன், மனைவி இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இன்றையதினம் காலை நொச்சிகுளம் பகுதியில் இருந்து கணவனும், மனைவியும் ஒரு மோட்டார் சைக்களில் புளியங்குளம் நோக்கி சென்றுள்ளனர்.
இதன்போதே கொலை செய்ய திட்டமிட்டிருந்த கணவர் சின்னப்பூவரசன்குளம் காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்ததாக தெரிவித்திருந்தார்.
சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தரே கொலையை செய்ததாக தெரிவித்து பொலிஸ்நிலையத்தில் சரண்அடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.