Our Feeds


Monday, June 2, 2025

SHAHNI RAMEES

கொழும்பு மாநகரசபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் ரீஸா சரூக்! - முஜிபுர் ரஹ்மான் தகவல்

 


கொழும்பு மாநகரசபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின்

மேயர் வேட்பாளராக ரீஸா சரூக் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இது தொடர்பில் ஏனைய கட்சிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அக்கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.


கொழும்பில்  ஞாயிற்றுக்கிழமை (01)  ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,



கொழும்பு மாநகரசபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உள்ளுராட்சிமன்ற ஆணையாளரால் சபை கூட்டப்படும் தினம் அறிவிக்கப்படும்.


அவ்வாறு சபை கூட்டப்படும் தினத்தில் மாநகர மேயரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பினை நடத்த வேண்டியேற்படும். 


எந்தவொரு கட்சிக்கும், சுயேச்சை குழுவுக்கும் 50 சதவீதத்துக்கும் அதிக வாக்குகள் இன்மையால் வாக்கெடுப்பின் மூலமே தெரிவுகள் இடம்பெறும்.


வாக்கெடுப்பு இரகசியமானதா, பகிரங்கமானதா என்பதும் சபை கூட்டத்தின் போதே தீர்மானிக்கப்படும். நாம் பகிரங்க வாக்கெடுப்பினையே வலியுறுத்துவோம். 


கொழும்பு மாநகரசபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்குவதற்கு பெரும்பாலான தரப்பினர் முன்வந்துள்ளனர். 


மேயர் வேட்பாளர் யார் என்பதை ஏனைய கட்சிகளுக்கு அறிவித்திருக்கின்றோம். அதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். எமது வேட்பாளருக்கு அனைவரும் ஆதரவு வழங்குவர் என்று நம்புகின்றோம்.


ரிசா சாரூக் கொழும்பு மாநகரசபையில் 20 ஆண்டுகள் உறுப்பினராக பதவி வகித்திருக்கின்றார். இளம் அனுபவம் மிக்க அவரால் நிச்சயம் கொழும்பை நிர்வகித்துச் செல்ல முடியும். 



கொழும்பு மக்களும் அவரை நன்கு அறிவார்கள். உள்ளுராட்சிமன்றங்களில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பிளவுகள் இல்லை.



அனைவரும் இணைந்து தான் தலைமைத்துவ பதவிகளில் உள்ளவர்களை தெரிவு செய்ய வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரை விட எமது வேட்பாளர் அனுபவம் மிக்கவர் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »