Our Feeds


Sunday, June 1, 2025

SHAHNI RAMEES

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்!

 


அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு

அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், உத்தியோகப்பூர்வ விஜயத்தை  மேற்கொண்டு  செவ்வாய்கிழமை (03) இலங்கைக்கு வருகிறார்.


இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருணா ஜெயசேகர உள்ளிட்டவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளார்.



இதேவேளை, லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிலையத்தில் இடம்பெறவுள்ள சிறப்பு நிகழ்வின் போது ' அவுஸ்திரேலியா மற்றும் இந்திய பெருங்கடல்' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.


இலங்கை விஜயத்திற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ், சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு பேரவையின் மாநாட்டில் பங்பேற்றிருந்தார்.


இதன் போது குவாட் அமைப்பின் பங்காளிகளான அமெரிக்கா மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்ற முதல் சந்திப்பு என்பதால் முத்தரப்புமே மிக ஆர்வமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டனர்.


அதே போன்று மூன்று நாடுகளும் கூட்டு இராணுவப் பயிற்சிகள், உளவுத்துறை மற்றும் கண்காணிப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இதன் போது ஒப்புக்கொண்டன.


இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மைகளை ஆழப்படுத்துவதுடன், உலகளாவிய பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறானதொரு நிலையில், வர்த்தகம் மற்றும் முதலீடு, கல்வி, விளையாட்டு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் ஒத்துழைப்பின் வரலாற்றைப் பகிர்ந்து கொள்வதுடன், இரு நாடுகளுக்க இடையில் 78 வருடகால இராஜதந்திர உறவுகள் உள்ளன.


அமைதியான, நிலையான மற்றும் வளமான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் பொதுவான நலன்களை பாதுகாப்பதிலும் பொருளாதாரம், பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் உட்பட பரந்துப்பட்ட ஒத்துழைப்புகளின் அடிப்படையில் இருதரப்பு உறவுகள் வலுப்படுகின்ற நிலையில், பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களின் அடிப்படையில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »