Our Feeds


Sunday, June 1, 2025

SHAHNI RAMEES

பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமலின் பெயர் பரிந்துரை!

 

அமைச்சரவை மறுசீரமைப்பின் போது  பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயரை மக்கள் விடுதலை முன்னணி பரிந்துரைத்துள்ளது. இதற்கு அமைச்சர்களான சுனில் ஹந்துனெத்தி மற்றும் லால் காந்த ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறதென  பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் குறித்து தனியார் ஊடகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மக்கள் விடுதலை முன்னணிக்கும்,தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் முரண்பாடுகள் ஏதுமில்லை ஆகவே அமைச்சரவையை மறுசீரமைப்பதற்கான அவசியம் கிடையாது என்று கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி அண்மையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த ஆறுமாத பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவையை கூட்டு விருப்பத்துடன் மறுசீரமைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.


அமைச்சர் பிமல் ரத்நாயக்க சபைமுதல்வராக பாராளுமன்றத்தில் செயற்படும் விதம் குறித்து எதிர்க்கட்சிகள் மாத்திரமல்ல பாராளுமன்ற உயர் அதிகாரிகளும் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார்.

தான்தோன்றித்தனமான முறையில் செயற்படுவது  சபை முதல்வர் பதவிக்கு அழகல்ல, மக்கள் விடுதலை முன்னணிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் பனிப்போர் தீவிரமடைந்துள்ளது.

இந்த அரசாங்கத்தில் தேசிய மக்கள் சக்தியினர் ஆதிக்கம் கொண்டுள்ளதை மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எதிர்த்து வருகிறார்கள்.

இவ்வாறான பின்னணியில் தான் அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்டு, பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சர்களான சுனில் ஹந்துனெத்தி மற்றும் லால் காந்த ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதனால் தான் அமைச்சரவை மறுசீரமைப்பு என்பதொன்று இல்லை என்று இவர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »