Our Feeds


Sunday, June 1, 2025

SHAHNI RAMEES

SLMC, ACMC உள்ளிட்ட கட்சிகளின் ஒத்துழைப்புடன் 35 இற்கும் அதிகமான சபைகளை கைப்பற்றுவோம்! - சுமந்திரன்


வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில்

35இற்கும் அதிகமான சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் பதில்பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 377ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் வடக்கு,கிழக்கில் 35சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு எதிர்பார்ப்புடன் உள்ளது.


அண்மைய நாட்களில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய தரப்புக்களுடன் நாம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



குறிப்பாக, பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற சபைகளில் அந்தந்தக் கட்சிகள் மேயர், தவிசாளர் பதவிகளுக்கான உறுப்பினர்களை முன்மொழியவுள்ளதோடு அவர்களுக்கான ஆதரவினை மேற்படி கட்சிகள் வழங்குவது என்ற பொதுப்படையான இணக்கப்பாடு காணப்படுகின்றது.


அதனடிப்படையில் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதேநேரம் சாவகச்சேரி நகரசபை உள்ளிட்ட சம ஆசனங்களைப் பெற்ற சபைகள் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணக்கப்பாடு எட்டப்படாமையால் நாமும் உறுப்பினரை தவிசாளர் பதவிக்கு முன்மொழிவோம். 


அவ்வாறு முன்மொழியப்படும் உறுப்பினருக்கு காணப்படும் ஆதரவின் அடிப்படையில் ஆட்சி அமைக்கப்படும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »