Our Feeds


Tuesday, June 10, 2025

SHAHNI RAMEES

SJB கொழும்பு மேயர் வேட்பாளர் ரிஸா சரூக் சுத்தவாளி! முறைப்பாட்டில் உண்மையில்லை - முஜிபுர் ரஹ்மான்

 


கொழும்பு மாநகர சபை மேயராக ஐக்கிய மக்கள்

சக்தியினால் பெயரிடப்பட்டிருக்கும் ரிஸா சரூக் தொடர்பில் எதிர்க்கட்சியில் இருக்கும் கட்சிகளுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவர் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டிருக்கும்  முறைப்பாட்டிலும் உண்மை இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.


கொழும்பு மாநகரசபை மேயர் பதவிக்கு பெயரிடப்பட்டிருக்கும் ரிஸா சரூக் தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கிடையில் முரண்பாடு ஏற்படுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு  எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அரசாங்கத்துக்கு 48 ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில், சுயேட்சைக்குழுக்கள் மற்றும்  எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு என மொத்தமாக 69 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனால் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.


அதன் பிரகாரம்  எதிர்க்கட்சிகளின் கட்சி செயலாளர்களுடன் இதுதொடர்பாக கலந்துரையாடி ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த, மாநகர சபையில் நீண்டகால அனுபவமுள்ள, ரிஸா சரூக்கை மேயராக பெயரிட நாங்கள் தீர்மானித்தாேம். எமது தீர்மானத்துக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், எமது கட்சியில் , இந்தமுறை கொழும்பு மாநகரசபை தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காத உறுப்பினர் ஒருவர், ரிஸா சரூக் தொடர்பில் பொய்யான முறைப்பாடு ஒன்றை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை தெரிவித்திருந்தார்.



இந்த முறைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு, எதிர்கட்சியில் எமதுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்த கட்சிகளுக்குள், மேயராக பெயரிடப்பட்டவர் தொடர்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக பொய் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் எந்த  உண்மையும் இல்லை. எதிர்கட்சிகளில் அனைத்து கட்சிகளும் எமது உறுப்பினருக்கு ஆதரவளிப்பதாகவே எமக்கு தெரிவித்திருக்கின்றன. அதனால் காெழும்பு மாநகர சபையில் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.


அதேநேரம் ரிஸா சரூக்குக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் பொய் முறைப்பாடு செய்த நபருக்கு எதிராக ரிஸா சரூக் தற்போது வழக்கு தொடுத்திருக்கிறார். அத்துடன் குறித்த நபர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்திருக்கும் முறைப்பாட்டில் அவரின் முகவரியை கூட குறிப்பிடாமலே முறைப்பாடு செய்திருக்கிறார். எங்கள் மத்தியில் குழப்பதை ஏற்படுத்தும் நோக்கிலே அவர் இதனை செய்திருக்க வேண்டும் என்றே நாங்கள் நம்புகிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »