"Dream Destination" எனும் திட்டத்தின் கீழ் 100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான வர்த்தகர்கள் குழுவின் முக்கிய சந்திப்பு நேற்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர்,
“நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும். அதற்கான பங்களிப்பு தளத்தை தற்போதைய அரசாங்கம் உருவாக்கியுள்ளது. சுயமாக முன்வந்த தனியார் வர்த்தகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.” எனக் கூறினார்.
உலகத் தரத்திற்கேற்ப தூய்மையும், பாதுகாப்பும், பயண வசதிகளும் கொண்ட புதிய புகையிரத நிலைய கட்டமைப்பை உருவாக்க நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம் அரச, தனியார் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்படும் பொதுமக்கள் - தனியார் கூட்டுத்தாபனத்தின்கீழ் செயல்படுத்தப்படுகிறது.
இந்த வேலைத்திட்டத்தில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, மற்றும் Clean Sri Lanka திட்டம் இணைந்து செயற்படுகின்றன. NIO Engineering நிறுவனம் தன்னார்வ ரீதியில் தொழில்நுட்ப பங்களிப்பு வழங்குகிறது. வர்த்தகர்கள் நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர்.
திட்டத்தின் முக்கிய அம்சங்களில்:
அனைத்து பயணிகளுக்கும் (விசேட தேவை உள்ளவர்கள் உட்பட) பாதுகாப்பான மற்றும் தூய்மையான இடம் வழங்கல்
6 மாதங்களுக்குள் நிர்மாணப் பணிகளை முடிக்கும் இலக்கு
புதிய அடையாளத்துடன் புகையிரத நிலையங்களை உருவாக்குதல்
இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, மேலதிக செயலாளர் எஸ்.பீ.சி. சுகீஷ்வர, மற்றும் பல தனியார் வர்த்தகர்கள் பங்கேற்றனர்.
