Our Feeds


Saturday, July 19, 2025

Zameera

ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது

ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

புதிய கல்வி மறுசீரமைப்பு குறித்து தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நோக்குடன் காலி, தக்ஷினபாய கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

புதிய கல்வி மறுசீரமைப்புகள் குறித்து மாகாண அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நான்காவது நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது:

“கல்வி மறுசீரமைப்புக்காக நீங்கள் பெற்றுத்தரும் ஆதரவுக்கு நான் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில், எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே புதிய கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்வது பற்றி கலந்துரையாடப்பட்டு, திட்டமிடப்பட்டது.

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப நிபுணர்களுடன் கலந்துரையாடி, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பெற்றே, இந்தக் கொள்கைகள் வகுக்கப்பட்டன.

புதியக் கல்வி மறுசீரமைப்பில் பாடத்திட்டத்தினை மட்டுமின்றி, ஆசிரியர்களின் தொழில்சார் திறனை மேம்படுத்துதல், புதிய மறுசீரமைப்புக்கு ஏற்ப கல்வி நிர்வாக அமைப்பை மறு சீரமைத்தல், அனைத்து குழந்தைகளுக்கும் சமமான,தரமான கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இது எமது தனிப்பட்ட தேவைக்காகச் செய்யும் ஒன்றல்ல, நாட்டின் தேவையை உணர்ந்து, நாம் நிறைவேற்ற வேண்டிய ஒரு பொறுப்பாகும் என்ற உணர்வுடன் மேற்கொள்ளப்படும் ஒரு பணியாகும்.

நேர்மையான எண்ணத்துடன், சமூகத்தில் இது குறித்த ஒரு புரிந்துணர்வை விவாதத்தை ஏற்படுத்தும் ஒரு தரப்பினர் அது போலவே, சரியான புரிதலை பெறாது விமர்சிக்கும் தரப்பினரும் இருக்கின்றனர். இன்னும் சிலர் அரசியல் இலாபங்களுக்காகவும் விமர்சிக்கின்றனர்.

இந்த மறுசீரமைப்பை மேற்கொள்வது ஒரு சவாலாகும். அது எளிதானதல்ல என்பதை நாம் அறிவோம். இருப்பினும் இதனை செய்யாதிருக்க இயலாது. இவை அனைத்தையும் நிவர்த்திச் செய்யவே மக்கள் எமக்கு வாக்களித்தார்கள் புதிய கல்வி மறுசீரமைப்பிற்காக செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் 16 வருடங்களாக மாற்றப்படவில்லை, அவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்க வேண்டும். ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்றுநர்களுக்குப் பயிற்சி அளித்து, ஆசிரியர் பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன, எனவும் பிரதமர் தெரிவித்தார்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »