உறுதியான சட்டமொன்று இல்லாமையின் காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாமல் உள்ளது. முறையான சட்டமொன்று அமுலாக்கப்பட்டால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராக இருக்கிறது.
சட்டத்தை நிறைவேற்றுவதற்கான அழுத்தம் கொடுக்க அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தம் பிரயோகிக் கூடிய ஏனைய சகல தரப்பும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
நாட்டில் கடந்த 10 மாதங்களில் மூன்று தேர்தல்களை நடத்தி நிறைவு செய்துள்ளோம். தேர்தல் என்பது முழுமையாக நிறைவேற்றுத் துறையின் செயற்பாடாகும். அந்த நிறைவேற்றுத் துறையின் செயற்பாட்டை நிறைவேற்றுவதற்கு, சட்டத்துறையில் நிறைவேற்றப்பட்ட சட்டமொன்று இருக்க வேண்டும். அந்த சட்ட திட்டத்தின் அடிப்படையிலேயே தேர்தல்களை முழுமையாக நடத்தி வருகிறோம்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உறுதியான சட்டமொன்று இல்லாமையின் காரணமாகவே, மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாமல் உள்ளது. முறையான சட்டமொன்று அமுலாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராக இருக்கிறது.
தேர்தல் கடமைகளில் நேரடியாக பணியாற்றும் அரச அதிகாரிகளுக்கு மாத்திரமே தற்போது தபால் மூல வாக்களிப்புக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு புதிய சட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுமாக இருந்தால் உடகவியலாளர்களுக்கு மாத்திரமல்லாமல் வாக்களிப்பு தினத்தன்று வாக்களிப்பு வாய்ப்பை தவறவிடும் அத்தியாவசிய சேவையைசேர்ந்த சகல அதிகாரிகளுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும். எனவே, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தம் பிரயோகிக்கக் கூடிய ஏனைய சகல தரப்பும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று கோரினார்.
