Our Feeds


Monday, July 28, 2025

Sri Lanka

மின்சார சபையை தனியார் மயப்படுத்த அரசு முயற்சி - சம்பிக்க ரணவக்க!



இலங்கை மின்சார சபையின் தனியுரிமையை தனியார் மயப்படுத்தவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மின்சார சபையின் தனியுரிமையை இலங்கை மின்சார (திருத்தச்) சட்டமூலம் ஊடாக குழித் தோண்டிப்புதைக்க முயற்சிக்கிறார் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை மின்சாரசபை (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் எதிர்வரும் 06 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. மின்சார சபைச் சட்டமூலம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தால் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த அரசாங்கத்தால் இந்த சட்டம் தொடர்பான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டதன் பலர் இந்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்கள்.நீதிமன்றத்தின் வியாக்கியானத்துக்கு பின்னர் சட்டம் இயற்றப்பட்டது.

இலங்கை மின்சார சபை சட்டம் 2024.10.27 ஆம் திகதிமுதல் அமுல்படுத்தவிருந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் அந்த சட்ட அமுலாக்கத்தை இடைநிறுத்தியது.இதுவும் சட்டவிரோதமானதொரு செயற்பாடாகும்.

இலங்கை மின்சார சபை சட்டம் தொடர்பில் ஆராய்வதற்கு இந்த அரசாங்கம் ஒரு குழுவை நியமித்தது.அந்த குழுவின் பரிந்துரை அறிக்கைக்கு அமைய இலங்கை மின்சாரசபை(திருத்தச்) சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரித்தது.இந்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 15 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணா அல்லது முரணற்றதா என்பதை மாத்திரமே உயர்நீதிமன்றம் ஆராயும்.நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக தாக்கங்கள் குறித்து உயர்நீதிமன்றம் அவதானம் செலுத்ததாது. இலங்கை மின்சார சபை (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வியாக்கியானத்தை அரசாங்கம் முழுமையாக செயற்படுத்துமா என்பது சந்தேகத்துக்குரியதே.

இலங்கை மின்சார சபையின் தனியுரிமையை தனியார் மயப்படுத்தவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மின்சார சபையின் தனியுரிமையை இலங்கை மின்சார (திருத்தச்) சட்டமூலம் ஊடாக குழித்தோண்டிப்புதைக்க முயற்சிக்கிறார்.

இந்த சட்டமூலத்தில் இலங்கை மின்சார சபையின் தனியுரிமையை 5 அல்லது 6 நிறுவனங்களாக கூறுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை செயற்படுத்தியதன் பின்னர் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அதிகாரம் பிற தனியார் நிறுவனங்களுக்கு கையளிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.

நடைமுறை பூகோள அச்சுறுத்தலான நிலையில் நாட்டின் எரிசக்தி துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.மின்சார சபையின் ஊழல் மோசடியை முடிவுக்கு கொண்டு வர நிறுவன கட்டமைப்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் நாட்டு மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »