Our Feeds


Thursday, July 31, 2025

SHAHNI RAMEES

மனிதமும் நீதியும் செத்தால் ஜனநாயகம் பிணநாயகம் ஆகிவிடும்!


 தமிழின அழிப்பு விடயத்தில் வேட்டையாடிகள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வேட்டைக்கு ஆணையிட்ட வேட்டைக்காரர்கள் இன்னும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படவில்லை. இது விடயத்தில் அம்புகள் மாட்டிக் கொண்டுள்ளன. எய்தவர்கள் இதுவரை கைதாகவில்லை. என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.


இன்று வியாழக்கிழமை (31) அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,


மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் இறுதி யுத்தம் 2005 இல் இருந்து 2009 வரை தீவிரமாக நடைபெற்றது.அதன் போது மனிதக் கடத்தல், சித்திரவதைகள், காணாமல் ஆக்குதல் சர்வசாதாரணமாக நடைபெற்றன. பல்லாயிரக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர்.


அதற்குக் கருவிகளாகச் செயற்பட்டதாகக் கூறப்படுவோர் இவ்வாட்சியில் கைதாகி வருகின்றனர்.ஆனால் கர்த்தார்களாக இருந்த இயக்குனர்கள் இன்னும் சுதந்திரமாகச் செயற்படுகின்றனர். 



மேலும் உயிர்த்த  ஞாயிறுத்தாக்குதல் விடயத்திலும் அம்புகள் அகப்படுகின்றனர். தொடுத்த வில்லர்கள் இன்னும் கைதாகவில்லை. எனவே, இந்த விடயத்தில் நாசகார வேலைகளின் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு, நீதியின் முன்பா நிறுத்தப்பட்டு முறையான விசாரணை நடாத்தப்பட்டால் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியினை அளிப்பதற்கு உதவும்.


மாறாக வேட்டையாடிகளை மாத்திரம் கைது செய்வதால், நீதி கிடைக்கப் போவதில்லை.1956 இல் இருந்து 2015 வரை இன அழிப்பில் ஈடுபட்ட வேட்டைக்காரர்களோ வேட்டையாடிகளோ இதுவரை தண்டிக்கப்படாத குற்றவாளிகளாக இருந்து வருகின்றனர்.


இவர்கள் அதியுச்சப் பதவிகளையும் வகித்து வந்துள்ளனர். இவைதான் இந்த நாட்டின் சாபக்கோடாகவுள்ளது. இதனால் குற்றவாளிகளின் ஆளுகையினால் நாடு குட்டிச்சுவராகியுள்ளது. ஊழல் மோசடிகள் கொள்ளை கொலை தாண்டவமாடியதால் நாடு நாசமாக்கப்பட்டுள்ளது.



பாரிய குற்றச் செயல்களுக்கான பெரிய பெருந்தலைகள் (Big boss) சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தகுதி தராதரம் பார்க்காமல் தண்டிக்கப்பட வேண்டும். பல்லாயிரக் கணக்கான மனிதப் படுகொலை களுக்கான பெருந் தலைகள் மறைக்கப்படும் வரை இந்த நாடு உருப்பட வாய்ப்பு இல்லை. 


குற்றச் செயல்களுக்கான சூழலை உருவாக்குதல், குற்றங்களைச் செய்ய வாய்ப்பளித்தல், குற்றவாளிகளைப் பாதுகாத்தல், குற்றவாளிகள் பொறுப்பு மிக்க பதவிகளை வகித்தல் என்பன நடைபெறுவதால் இந்த நாட்டில் தீர்வுக்கான உள்நாட்டுப் பொறிமுறை உருக்குலைந்து போயுள்ளது.


இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. வெலிக்கடைப் படுகொலைக்குத் தலைமை தாங்கியதாகக் கூறப்படும் விமானக் கடத்தலில் ஈடுபட்ட சிங்களக்கைதி  மற்றும் மிரிசுவில் படுகொலையாளியும் மரண தண்டனைக் குற்றவாளியுமான சுனில் ஆகியோர் ஜனாதிபதிகளின்  பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதும் பாரிய குற்றவாளிகளை இனவாத ரீதியில் பாதுகாக்கும் செயல்களாக அமைந்தன. 



எனவே  மனிதக் கடத்தல் காணாமல் ஆக்குதல், படுகொலைகள்,வதைகள், உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் போன்ற பாரிய குற்றங்களுக்குக் கால்கோளிட்ட சூத்திரதாரிகள் வெளிச்சப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.அம்புகள், வேட்டையாடிகளை மாத்திரம் தண்டிப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியோ, பரிகாரமோ கிடைக்காது .மனிதமும் நீதியும் செத்தால் சனநாயகம் பிணநாயகம் ஆகிவிடும். என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »