Our Feeds


Tuesday, July 29, 2025

Sri Lanka

மாகாண சபைத் தேர்தல் சட்ட சிக்கலுக்கு பாராளுமன்றத்திலேயே தீர்வு – தேர்தல்கள் ஆணையாளர்!


மாகாண சபைத் தேர்தலை எந்த தேர்தல் முறையில் நடத்துவது என்ற சட்ட சிக்கலுக்கு பாராளுமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும். தேர்தல் முறைமையை சிறந்த முறையில் தீர்மானித்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்த தயாராகவே உள்ளோம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த 10 மாத காலப்பகுதியில் 3 தேர்தல்களை நடத்தி முடித்துள்ளோம்.உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய உள்ளுராட்சிமன்றத் தேர்தலை சிறந்த முறையில் நடத்தினோம்.தற்போது உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் இயங்குவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியாகவுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றம் கடந்த காலங்களில் பல வியாக்கியானங்களை முன்வைத்துள்ளது. மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்துவதா அல்லது புதிய தேர்தல் முறையிலா நடத்துவது என்பதில் பாரிய சட்ட சிக்கல்கள் காணப்படுகிறது.

தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பது தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் பலவற்றுக்கு யோசனைகளை முன்வைத்துள்ளோம்.

மாகாண சபைத் தேர்தலை எந்த தேர்தல் முறையில் நடத்துவது என்ற சட்ட சிக்கலுக்கு பாராளுமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும். தேர்தல் முறைமையை சிறந்த முறையில் தீர்மானித்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்த தயாராகவே உள்ளோம். ஆகவே சட்ட சிக்கலுக்குத் தீர்வு காணும் பொறுப்பு  சகல அரசியல் கட்சிகளுக்கும் உண்டு.

தேர்தல் தினத்தன்று கடமைகளில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள், மற்றும் ஏனைய தரப்பினர்கள் தபால்மூலம் வாக்களிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டுமாயின் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். பாராளுமன்றம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »