Our Feeds


Tuesday, July 1, 2025

SHAHNI RAMEES

இன முறுகல்களுக்கு ”மொழி பிரச்சினையே” முக்கிய காரணி! - முனீர் முளப்பர்

 


இன, மத மற்றும் மொழி ஆகியவற்றுக்கு இடையில் தோன்றும்

முறுகல்களுக்கு பின்புலமாக, மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் "மொழி" முக்கியமான காரணியாக அடையாளங்காணப்பட்டுள்ளது. எனவே, சமூகத்தில் பெரும் மாற்றமாக, நமது தேவைகள் தாய்மொழியூடாகவே நிறைவேற்றப்பட வேண்டிய அவசியம் உருவாகிறது. அந்த தேவைகளை நம் தாய்மொழியின் மூலம் பூர்த்தி செய்யக்கூடிய சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் அடிப்படை பொறுப்பாகும் என தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்  தெரிவித்தார்.


அரச கரும மொழிகள் தினம் மற்றும் அரச கரும மொழிகள் வாரத்தை நடைமுறைபடுத்துவது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.




ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்த தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மேலும் தெரிவிக்கையில், 


எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே கூறியது இன,மத வேறுபாடு இன்றிய ஆட்சியின் மூலம் சிறப்பானதொரு எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதன் ஆரம்ப செயலாக செவ்வாய்க்கிழமை (01) முதல்  “அரச கரும மொழிகள் தினம் மற்றும் மொழிகள் வாரத்தை“ முன்னிட்டு “மொழியை வளர்ப்போம் - இதயங்களை வெல்வோம்” என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்.



குறிப்பாக எமக்குதெரியும் இன, மத, மொழி என்பவற்றுக்கு இடையிலான முறுகல்களுக்கு பின்னால் இருந்த காரணிகளில் ஒன்றாக மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் மொழி பிரதானமானதாக கண்டறிப்பட்டது.


தமது தாய் மொழி ஊடாக தமது தேவைகளை நிறைவு  செய்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் போது அதனை தமது தாய் மொழியூடாக நிறைவு செய்துகொள்ளக்கூடிய சூழலை ஏற்படுத்துவேண்டியது அரசாங்கத்தின் கடமையாக கருதுகின்றோம்.


2019 ஆம் ஆண்டு சுற்றறிக்கையின் படி மொழி வாரம் ஸ்தாபிக்கப்பட்டது. அந்தவகையில் கடந்த வருடங்களிலும் மொழி வாரம்  நிகழ்த்தப்பட்டாலும் முழுமையான இலக்கினை எட்டியதா என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் காணப்படும். 



எனவே மொழி வாரம்   வாரத்தோடு முடிந்து விடாது தொடர்ந்தும் செயற்பாட்டில் காணப்பட்டு அனைவரும் தமது மொழிகளின் ஊடாக சுதந்திரமாக பணியாற்றும் சூழலை உருவாக்கி இன நல்லுறவையும் சமாதானத்தையும் உருவாக்கும் ஒரு செயற்றிட்டத்திற்கான வசதிகளையும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் அடிப்படை கடமையாகும்.


பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். எனவே கடந்த காலங்களை போல் அல்லாது  நாங்கள் எதிர்பார்க்கும் இலக்கை நோக்கி பயணிப்போம். குறிப்பாக மக்களிடமிருந்து கருத்துக்களை பெற்று இந்த திட்டத்தில் குறைப்பாடுகள் காணப்பட்டால் அவைகளையும் நிவர்த்தி செய்து சமாதானத்துடனான சூழலை உருவாக்குவோம் என மேலும் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே.பண்டார , அரச மொழிகள் ஆணையாளர் நாயகம் திலக் நந்தன ஹெட்டியாராச்சி ,அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர்  நிமல் ஆர். ரணவக்க , அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் சமிந்த மஹலேகம் , தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் மகேசன்  மற்றும் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே.பண்டார ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »