இறக்குமதி செய்யப்பட்ட 323 கொள்கலன்கள்
சுங்க பரிசோதனைகள் இன்றி விடுவிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பாக விசாரணைக் குழு வெளியிட்ட அறிக்கையின் பரிந்துரைகளின் கீழ், பரிந்துரை 4இன் 3ஆவது பந்தியை அடிகோடிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (8) சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.இப்பரிந்துரையின் மூன்றாவது பந்தியில்,
"இவ்வாறு நல்லெண்ணத்துடன் கொள்கலன் நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால், இந்த நடைமுறை குறித்து முறையாக சுங்கத் திணைக்களத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் அறிவித்து, சுங்கப் பகுதியிலிருந்து வெளியேறிய பின்னர் அது குறித்து ஏனைய சுங்க விசாரணைப் பிரிவுகள் மூலம் சோதனைக்கு உட்படுத்தி "சிவப்பு" என வகைப்படுத்தப்பட்ட கொள்கலன்களை பௌதீக ரீதியான பரிசோதனை செய்யாததன் ஊடாக ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைத்துக்கொள்ள முடிந்திருக்கும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் பரிந்துரையின் மூலம் முழு செயல்முறையும் நல்லெண்ணமின்றியே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையே குறிக்கிறது எனத் தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, நிலையியற் கட்டளை 27(2)இன் கீழ், இப்பரிந்துரை தொடர்பாக சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.
அதன் அடிப்படையில் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளாவன:
1. 12.06.2025 அன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட 323 சந்தேகத்திற்குரிய இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்கள் குறித்த விசாரணை அறிக்கை இன்னும் பகிரங்கப்படுத்தப்படாததற்கான காரணங்கள் யாது? இந்த அறிக்கையை முழுமையாக பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ய அரசாங்கம் எப்போது நடவடிக்கை எடுக்கும்?
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களே வெளிக்கொணர்ந்தார். ஆனால், அரசாங்கமே இதைச் செய்திருக்க வேண்டும்.
2. 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும், 2025ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் துறைமுக நடவடிக்கைகளில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக கப்பல்கள் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சர் ஒருவரது தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு குழுவொன்று நியமிக்கப்பட்டதா? இந்தக் குழுவின் பரிந்துரைகள் யாது? இதன் பிரகாரம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாது?
3. சிவப்பு மட்டுமல்லாது, மஞ்சள் நிறமும் குறிக்கப்பட்ட கொள்கலன்களை முறையான பரிசோதனை இல்லாமல் விடுவிக்க, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடமிருந்தோ அல்லது அரசாங்க தரப்பிலிருந்தோ ஏதேனும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதா? அல்லது இறக்குமதியாளர்களிடமிருந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதா?
4. குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 323 கொள்கலன்கள் எந்தெந்த நாடுகளிலிருந்து வந்தன? அவற்றில் காணப்பட்ட பண்டங்கள் (பொருட்கள்) தொடர்பான ஆவணத்தை இந்த சபையில் சமர்ப்பிக்க முடியுமா? இவற்றை இறக்குமதி செய்த நிறுவனங்கள் யாவை?
13 சந்தர்ப்பங்களில், 2218 கொள்கலன்கள் பௌதீக சோதனை இல்லாமல் விடுவிக்கப்பட்டன. இதில் 999 சிவப்பு என வகைப்படுத்தப்பட்ட கொள்கலன்களும், மஞ்சள் நிறம் என வகைப்படுத்தப்பட்ட 1219 கொள்கலன்களும் இதில் அடங்கும். இது தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து தெளிவான பதிலை எதிர்பார்க்கின்றேன்.
5. சுங்கப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் மீதான சுங்க வரிகளை முறையாக அறவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா? அவ்வாறு அறவிடப்பட்டது என்பதற்கு தரும் உத்தரவாதம் யாது?
6. 23.01.2025 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் போதைப்பொருளோ அல்லது சட்டவிரோதப் பொருட்களோ இருந்தால் அதனை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் தெரிவித்தார். இந்தக் கூற்று இன்னும் செல்லுபடியாகுமா?
7. குழு முன்மொழிந்த 12 பரிந்துரைகளின் பிரகாரம் அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் யாது?
8. இது தொடர்பாக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா? அவ்வாறானால், அவற்றின் முன்னேற்றங்கள் யாது? இந்த சம்பவத்திற்கான பொறுப்புக்கூறலிருந்து அரசாங்கம் தப்பிக்க முடியுமா? இதற்கு அரசியல் அதிகாரம் படைத்தவர்கள் பொறுப்பாக இருந்தால், அவர்கள் தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகள் யாது?
9. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அரசாங்கத்தின் உத்தேச புதிய கொள்கைகள் அல்லது சட்டத் திருத்தங்கள் யாவை?
