மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி கருத்திட்டத்தை இடைநிறுத்தியதை போன்று திருகோணமலை முத்துநகர் மக்களின் காணி பிரச்சினைக்கும் அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். முத்துநகர் மக்களை மாற்றான்தாய் பிள்ளை போல் பார்க்க கூடாது.இம்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட தயார் என்று மக்கள் போராட்ட அமைப்பின் நிறைவேற்றுகுழு உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்தார்.
கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் முத்து நகர் பிரதேச மக்கள் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக ''முத்து நகர் 800 ஏக்கர் விவசாயக் காணிகள் சூறையாடப்படுவதை நிறுத்துஇ இந்திய கம்பனிகளின் காணி மற்றும் வளத்திருட்டுக்கு எதிரான போராட்டத்தை தொடங்குவோம்'என்று பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு போராட்டத்தில்'ஈடுபட்டனர்.இப்போராட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் முத்து நகர் பிரதேச மக்களுடன் பாரியதொரு பிரச்சினையை வெளிப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலகம் முன்பாக வியாழக்கிழமை (14) ஒன்றுக்கூடினோம். முத்து நகர் பகுதியில் 351 குடும்பங்களின் காணிகள் பலவந்தமான முறையில் கையகப்படுத்தப்பட்டு அவற்றை கம்பனிகளுக்கு விற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பிரச்சினை குறித்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவுறுத்தினோம்.இருப்பினும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.முத்து நகர் பகுதியில் பரம்பரை விவசாய காணிகளே இவ்வாறு பலவந்தமான முறையில் கையகப்படுத்தப்படுகின்றன.
இந்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக இந்த பிரதேச அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் குறிப்பிட்டார்கள்.ஆனால் தற்போது எவரும் இந்த பிரச்சினை பற்றி பேசுவதில்லை.இந்த காணி பிரச்சினை பற்றி அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கு கண் திறக்கப்படவில்லை அபிவிருத்தி கருத்திட்டங்களை வகுக்கும் போது சகல தரப்பினருடனும் கலந்துரையாடுவதாக ஜனாதிபதி புதன்கிழமை (13) குறிப்பிட்டுள்ளார். இதன்பிரகாரமே மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி கருத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.இது சிறந்தது.
சகல தரப்பினரது இணக்கப்பாட்டுடன் அபிவிருத்தி கருத்திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.ஜனாதிபதியின் இந்த தீர்மானம் ஏன் திருகோணமலை முத்து நகர் மக்களின் காணி பிரச்சினையின் போது எடுக்கப்படவில்லை.முத்து நகர் மக்களை ஏன் மாற்றான் தாய் பிள்ளையாக பார்க்க வேண்டும்.மன்னாரிலும், முத்து நகரிலும் இலங்கையர்களே உள்ளார்கள்.பலவந்தமான முறையில் மக்களின் காணிகளை கையகப்படுத்தும் செயற்பாட்டுக்கு நாங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.
கடந்த அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்ட அபிவிருத்தி கருத்திட்டங்களை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கவில்லை.மக்களாணைக்கு முரணாக செயற்பட்டு கம்பனிகளின் விருப்பத்துக்கு ஏற்ப செயற்பட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்த மக்களின் நியாயமான கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட தயார்.போலியான வாக்குறுதிகளை வழங்கி பிரச்சினைகளை மூடிமறைக்க முயற்சிக்க வேண்டாம் என்று அரசாங்கத்துக்கு குறிப்பிட்டுக்கொள்கிறோம்.கையகப்படுத்தப்பட்ட முத்துநகர் காணிகள் அம்மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் அதற்கு தொடர்ச்சியாக குரல் கொடுப்போம் என்றார்.
