Our Feeds


Monday, October 27, 2025

Zameera

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதற்குக் காரணம் அரசியல் காரணங்கள் அல்ல - பிரியந்த வீரசூரிய


 (எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதற்குக் காரணம் அரசியல் காரணங்கள் அல்ல என்றும், மாறாக திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நபர்களுடனான அவரது தொடர்புகளே காரணம் என்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல்கள் அத்தகைய தொடர்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். அத்தோடு பாராளுமன்ற  உறுப்பினர் விதானவுக்கு தற்காலிகப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் பொலிஸ்மா அதிபர் உறுதிப்படுத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது, ஆனால் இது அரசியல் ரீதியாகத் தூண்டப்பட்ட விடயம் அல்ல. பாதாள உலகக் குழுக்களுடனும் சட்டவிரோத நடவடிக்கைகளுடனும் தொடர்புடைய நபர்களுடன் அவருக்கு இருந்த கடந்த கால கொடுக்கல் வாங்கல்களையே புலனாய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன என்று பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

ஜகத் விதான தனது வாகனத்தில் இருந்து இறங்கும்போது தன்னைக் குறிவைத்து ஒரு கொலைத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தனக்கு அறிவிக்கப்பட்டதாகப் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். அவரது கோலிக்கையத் தொடர்ந்து, அவரது பாதுகாப்புக்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

அச்சுறுத்தலின் மூலத்தை உறுதிப்படுத்தவும் சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காணவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »