கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச தொகை 6% என்பது ஒரு சர்வதேச அளவுகோல் என்றும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் 6% என்ற விடயத்தில் எந்தவிதமான தர்க்கமும் இல்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் 2025 நவம்பர் 26 பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
அன்றும் 6% போராட்டத்திற்கு ஆதரவாக நின்றோம், இன்றும் அதற்காக நிற்கிறோம். ஆறு சதவீதம் என்பது ஒரு சர்வதேச அளவுகோல். இது யுனெஸ்கோ வழங்கிய அளவுகோல்.
அது நாமோ பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கமோ மட்டுமல்ல முழு நாடும் சர்வதேச சமூகமும் ஆதரிக்க வேண்டிய ஒரு அளவுகோலாகும் என்றே நான் நினைக்கிறேன். அதற்காக எமது நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
நாம் அந்தப் போராட்டத்தை 2011-ல் ஆரம்பித்தோம். 2011 முதல் 2024 வரை, நாட்டை ஆண்டதும், கல்விக்காக நிதி ஒதுக்கியதும் எமது அரசாங்கம் அல்ல. இப்போது இதை ஒப்புக்கொள்பவர்கள் ஆட்சியில் இருந்த ஒரு காலமும் இருந்தது. அப்படியானால் அவர்கள் அந்த ஆறு சதவீத போராட்டத்தில் தலையிட்டிருக்கலாம், ஆனால் அவர்கள் தலையிடவில்லை. நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்றுக் கொண்டபோது, கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகை ஒன்று புள்ளி பூஜ்ஜியம் நான்கு சதவீதமாகவே இருந்தது.எமது முதலாவது வரவு செலவுத் திட்டத்திலேயே நாம் அதை அதிகரித்தோம். இரண்டாவது வரவு செலவுத் திட்டத்திலும் அதை அதிகரித்துள்ளோம். இந்த ஆறு சதவீத இலக்கை அடைய நாங்கள் பாடுபடுகிறோம் என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றோம்.
2011 முதல் 2024 வரை ஆட்சி செய்தவர்கள் அந்த இலக்கை நோக்கிச் செல்லும் திசையில் இருக்கவில்லை, மாறாக இன்னும் கீழ்நோக்கிய திசையிலேயே சென்றுகொண்டிருந்தனர். இப்போது நாம் இந்த அதிகரிப்பு திசைக்கு வரும்போது, அவர்கள் ஏன் 6% கொடுக்கவில்லை என்று கேட்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் எழுப்புகின்ற 6% பிரச்சினையில் எனக்கு எந்த தர்க்கமும் தெரியவில்லை ஆயினும் எமது நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது.
கல்வியில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்பதையும், படிப்படியாக நிதி ஒதுக்கி வருகிறோம் என்பதையும் வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நாம் காட்டியுள்ளோம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் படிப்படியாக ஆறு சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்பதை கூறியுள்ளோம். அதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
மேலும், தேசிய பாடசாலைகளில் கணிஷ்ட ஊழியர்களிடையே அதிகபடியானவர்கள் இல்லை என்றாலும், மாகாண பாடசாலைகள் மற்றும் தேசிய பாடசாலைகளில் தொழிலாளர்கள் சேவையை விட்டுச்செல்லுதல், பதவி உயர்வுகள் மற்றும் ஓய்வு பெறுதல் காரணமாக ஊழியர் வெற்றிடங்கள் உள்ளன.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போது நிலவும் கனிஷ்ட ஊழியர் வெற்றிடங்களுக்கு புதிய ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், வெற்றிடங்கள் உள்ள பாடசாலைகளுக்கு ஆட்சேர்ப்புகள் செய்யப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
