Our Feeds


Thursday, November 27, 2025

Zameera

உதித் லொக்குபண்டார எம்.பி. வைத்திருந்த துப்பாக்கி தொடர்பில் விசாரணை


அரசாங்கத்துக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் நுகேகொடையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார கைத்துப்பாக்கியுடன் மேடையில் நின்றமை குறித்து விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.



மேற்படி கூட்டத்தில் நாமல் ராஜபக்ஷ எம்.பி. உரையாற்றும்போது அதனருகில் கழுத்துப் பை ஒன்றைத் தாங்கியபடி, கைத்துப்பாக்கி ஒன்றைச் சுடுவதற்குத் தயார்நிலையில் வைத்திருக்கும் பாணியில் முன்னாள் எம்.பி. உதித் லொக்குபண்டார நின்றுகொண்டிருந்தமை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.



தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைப் பிரதிநித்துவப்படுத்தும் உதித் லொக்குபண்டார அப்படி இருந்தது ஏன்?அவர் நாமல் ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்கினாரா? அல்லது தற்பாதுகாப்புக்காக அப்படிச் செயற்பட்டாரா என்ற கோணங்களில் நோக்கப்படுவதால இது பற்றிய விசாரணைகளை நடத்தத் தீர்மானித்திருக்கும் பாதுகாப்பமைச்சு, இது தொடர்பில் அறிக்கையொன்றை நுகேகொட பகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோரியுள்ளது.



இந்த விடயம் தொடர்பில் உதித் லொக்குபண்டார மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரிடம் வாக்குமூலம் பெறவும் பொலிஸ் தயாராகி வருகிறது.



உதித் வைத்திருந்த கைத்துப்பாக்கி சிலவேளை பாதுகாப்பமைச்சின் அனுமதியுடன் பெறப்பட்ட ஒன்றாக இருந்தாலும் அதனை பொதுவெளியில் அப்படி வைத்திருக்கலாமா? இது அச்சமூட்டும் செயற்பாடாக அமையாதா? என்ற கோணங்களிலும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது.



எவ்வாறாயினும், இந்தக் கைத்துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு விவகாரத்தை நாமல் ராஜபக்ஷ அறிந்திருக்கவில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவித்தன.



இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பமைச்சு விரைவில் அறிவிப்பொன்றை வெளியிடலாமென மேலும் அறியமுடிந்தது

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »