பாராளுமன்ற உறுப்பினர் டி.வீ. சானக பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக தெரிவுக்குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டிருப்பதாக என சபாநாயகர் சபையில் அறிவிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதால், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் டி.வீ. சானக அக்குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130 (3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் நேற்று (18) தெரிவுக்குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதேவேளை, 2025 செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி சபா பீடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கரவின் நடத்தை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகலவனால் 2025 செப்டெம்பர் 25 ஆம் திகதியன்று இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு, அது குறித்து ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காக பிரதிச் சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) உபாலி பன்னிலகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவொன்று தன்னால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.
அத்துடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 116 இன் ஏற்பாடுகள் மற்றும் 2025 மார்ச் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பவற்றின் பிரகாரம் நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காகவும், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 இன் ஏற்பாடுகள் மற்றும் 2025 மார்ச் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பவற்றின் பிரகாரம் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றுவதற்காகவும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா அவர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.
மேலும், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 இன் ஏற்பாடுகள் மற்றும் 2025 மார்ச் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பவற்றின் பிரகாரம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றுவதற்காக, பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து அவர்கள், மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 இன் ஏற்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றுவதற்காக, பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி ஆகியோர் தெரிவுக்குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.
