Our Feeds


Tuesday, November 4, 2025

SHAHNI RAMEES

அரசாங்கம் தன்னிச்சையாக எடுக்கும் அனைத்து தீர்மானங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது – முஜிபுர்





பாடசாலை நேரத்தை 30 நிமிடத்தால் அதிகரிப்பது

குறித்து கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும்.  கல்வி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இது குறித்து நாம் கேள்வியெழுப்புவோம். அரசாங்கம் தன்னிச்சையாக எடுக்கும் அனைத்து தீர்மானங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


பாடசாலை நேரத்தை 30 நிமிடத்தால் அதிகரிப்பது குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய கருத்து வெளியிட்டிருக்கின்றார்.


தொழிற்சங்கங்கள் இந்த தீர்மானம் குறித்து எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன.


அதிபர், ஆசிரியர்கள் உட்பட துறைசார்ந்தவர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்காமல் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அரை மணித்தியாலயத்தால் பாடசாலை நேரத்தை அதிகரிப்பதாயின், அதற்கான அடிப்படை காரணியொன்று காணப்பட வேண்டும்.


அந்த காரணிகள் தொழிநுட்ப ரீதியானவையாக இருக்க வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் சுமார் 20 கிலோ மீற்றருக்கும் அதிக தூரம் பயணித்து பாடசாலைகளுக்கு வருபவர்களாக இருப்பர்.


ஏனைய பல மாணவர்கள் பாடசாலை நேரத்தின் பின்னர் விளையாட்டு உள்ளிட்ட வெளிக்கள செயற்பாடுகளில் பங்குபற்றுவார்கள். எனவே 30 நிமிடங்களால் நேரத்தை அதிகரிப்பதால் அவற்றிலும் சிக்கல்கள் ஏற்படும்.


மாணவர்களுக்கு கல்வி சாரா செயற்பாடுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புக்கள் குறைவடையும்.


கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய இது தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, விளக்கமளிக்க வேண்டும்.


கல்வி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இது குறித்து நாம் கேள்வியெழுப்புவோம்.


அத்தோடு பாராளுமன்றத்திலும் பிரதமரிடம் இதற்கான விளக்கத்தைக் கோருவோம். நியாயமாக காரணியொன்றை அடிப்படையாக்க கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியும்.


அவ்வாறன்றி அரசாங்கம் தன்னிச்சையாக எடுக்கும் அனைத்து தீர்மானங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »