Our Feeds


Saturday, November 29, 2025

Zameera

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன


 நாட்டில் நிலவியுள்ள அசாதாரண கனமழையின் தாக்கம் மற்றும்  குளங்களில் வான் கதவுகள் திறந்ததன் காரணமாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் சனிக்கிழமை (29) முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திடீரென அதிகரித்த நீர்மட்டம் காரணமாக மக்கள்  வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மூதூர் மணிக்கூட்டு சந்தி, பாலர்நகர், அரபா நகர், ஆனைச்சேனை ,ஜாயா நகர் , வேதத்தீவு, இறால்குழி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் வீடுகள், சாலைகள் மற்றும் பொதுக் கட்டிடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் பல்வேறு அத்தியாவசிய சேவைகளும் தடுமாறியுள்ளன.

மேலும், பெரும் பரப்பளவில் பரவியுள்ள விவசாய நிலங்களும் நீரில் மூழ்கியதால் பயிர் சேதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளம் அதிகரித்ததை அடுத்து, தங்கள் வீடுகளில் தங்க முடியாத நிலையில் பல குடும்பங்கள் தற்போது தங்கள் உறவினரின் வீடுகள் மற்றும் பாடசாலைகளிலும் பாதுகாப்பான இடங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது. 

நிலைமை மேலும் கடுமையடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், அதிகாரிகள் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »