Our Feeds


Monday, November 3, 2025

Sri Lanka

தடையின்றி தேசிய அடையாள அட்டை விநியோகம் !



தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தடையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 



தற்போது 15 இலட்சம் விண்ணப்பங்கள் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காகக் குவிந்துள்ளதாக அத்திணைக்களம் கூறியுள்ளது. 



இந்த அடையாள அட்டைகளைத் திட்டமிட்ட அடிப்படையில் அச்சிட்டு விநியோகிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. 



அத்துடன், தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காகத் தினந்தோறும் திணைக்களத்துக்கு வருகை தரும் ஏனைய பொது விண்ணப்பதாரிகளுக்கும் தடையின்றி தொடர்ச்சியாக தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன. 



அந்த முழுமையான அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 


ஆட்பதிவுத் திணைக்களம் ஊடக அறிக்கை 


தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் முன் அச்சிடப்பட்ட வெற்று அட்டைகளை கொள்வனவு செய்வதற்கான பல டெண்டர்கள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் தொடர்ச்சியாக இரத்து செய்யப்பட்டதால், ஏற்பட்ட அட்டைகள் பற்றாக்குறை காரணமாக, தற்போதுள்ள அட்டைகளை முகாமைத்துவம் செய்து தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நோக்குடன், கடந்த ஐந்து (05) வருடங்களாக பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக பயன்படுத்தக்கூடிய தகவல் உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கப்பட்டு வருகிறது. 


தற்போது, தேசிய அடையாள அட்டைகளை அச்சிட்டு வழங்குவதற்காக சுமார் 15 இலட்சம் விண்ணப்பங்கள் உள்ளன, அவற்றை திட்டமிட்ட அடிப்படையில் அச்சிட்டு வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. 


தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காகத் தினந்தோறும் திணைக்களத்துக்கு வருகை தரும் ஏனைய பொது விண்ணப்பதாரிகளுக்கும் தடையின்றி தொடர்ச்சியாக தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன. 


அச்சு இயந்திரக் குறைபாடுகளும் ஊழியர் ஒத்துழைப்பும் 


தேசிய அடையாள அட்டைகளை உரிய விண்ணப்பதாரர்களுக்குத் தபால் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் உறைகளில் முகவரிகளை அச்சிடும் இயந்திரங்கள் கடந்த மார்ச் மாதம் பழுதடைந்தன. அவை உத்தரவாதக் காலத்திற்குள் இருந்ததால், அவற்றை வழங்கிய நிறுவனத்திடம் விரைந்து பழுதுபார்ப்பதற்காக ஒப்படைக்கப்பட்டு, பழுதுபார்த்த பின் மீண்டும் பெறப்பட்டன. 


அந்த இயந்திரங்கள் பழுதுபார்க்க அனுப்பப்பட்ட காலத்திலும், தேவையான அச்சிடும் நுகர்பொருட்களைப்பெற்றுக்கொள்ள எடுத்த காலத்திலும், தற்காலிகத் தீர்வாக, திணைக்கள அதிகாரிகள் மூலம் உறைகளில் முகவரிகளை கையால் எழுதி தேசிய அடையாள அட்டை விநியோக சேவையைத் தடையின்றித் தொடர்ந்து மேற்கொண்டனர். 


இதில் அதிகாரிகள் திறம்படச் செயல்பட்டதன் காரணமாக, அக் காலத்தில் சுமார் 45,000 அடையாள அட்டைகளை வழங்கியுள்ளது. 


தற்போது, அந்த இயந்திரங்கள் உறைகளை அச்சிடுவதற்குச் சாதாரணமாக, எந்தப் பிரச்சினையும் இன்றிப் பயன்படுத்தப்படுகின்றன. தேசிய அடையாள அட்டை அச்சிடும் இயந்திரங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறைபாடுகள் ஏற்படவில்லை. 


பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்குதல் 


2005 ஆம் ஆண்டு பிறந்த பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் பணி ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. 


2006 ஆம் ஆண்டு பிறந்த பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்குவதைத் தொடங்கும் அனைத்து ஏற்பாடுகளும் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் செய்யப்பட்டுள்ளன. 


அதன் பின்னர், 2007 ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய வருடங்களில் பிறந்த பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கும் தேசிய அடையாள அட்டைகள் திட்டமிட்ட அடிப்படையில் வழங்கப்படும். 


இந்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தற்போது வழங்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டையின் தகவல் உறுதிப்படுத்தல் கடிதத்தை, அனைத்துப் பரீட்சைகள் உட்பட தமது அடையாளத்தை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் எந்தத் தடங்கலும் இன்றிப் பயன்படுத்த முடியும். 


தேசிய அடையாள அட்டை அச்சிடல் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது 


கடந்த ஆண்டு முன்பதிவு செய்யப்பட்ட 2.3 மில்லியன் முன் அச்சிடப்பட்ட வெற்று அட்டைகள் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை திணைக்களத்திற்குக் கிடைத்துள்ளன. தற்போது அந்த அட்டைகளை முகாமைத்துவம் செய்து தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகிறது. 


திணைக்களத்தின் எதிர்காலத் தேவைக்காக முன் அச்சிடப்பட்ட வெற்று அட்டைகளை கொள்வனவு செய்வதற்கான கொள்வனவு செயல்முறை ஆரம்பிக்கப்பட்டு, தற்போது விலைமனுக்கள் கோரப்பட்டு வருகின்றன. 


அதன்படி, அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் தாமதமின்றி தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதை எதிர்காலத்தில் எந்தவிதத் தடங்கலும் இன்றித் தொடர்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முறையாக எடுக்கப்பட்டுள்ளன. 


இந்தத் திணைக்களத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் ஊடகங்கள் வெளியிடுமானால், பொதுமக்களுக்கு மிகவும் சரியான தகவல்களை வழங்க முடியும் என்பதால், அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க இந்தத் திணைக்களம் தயாராக உள்ளது. 


ஆட்பதிவு ஆணையாளர் நாயகம்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »