ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர் அல்ல. அரசியல் நோக்கங்களுக்காகவே அரசாங்கம் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பாதுகாப்பை நீக்கியிருக்கிறது. ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அரசியல் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தியமைக்காக பொலிஸார் பொறுப்புகூற வேண்டியேற்படும் என்பதை பொலிஸ்மா அதிபருக்கு நினைவுபடுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டுக்காக அனைத்து சந்தர்ப்பத்திலும் நாம் ஒருமித்து நிற்போம். ஆனால் அரசாங்கத்துடன் நிற்க மாட்டோம். அரசாங்கம் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் நிச்சயம் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். தவறான பாதையில் பயணித்தால் அதற்கெதிராக குரல் கொடுப்போம். அதுவே எதிர்க்கட்சியின் பிரதான பொறுப்பாகும்.
மாறாக தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியிலிருந்த போது அனைத்து வேலைத்திட்டங்களையும் சீர்குலைத்தைப் போன்று நாம் செயற்படப் போவதில்லை. அதேவேளை அரசாங்கத்துக்கு முட்டு கொடுப்பதற்கும் நாம் தயாராக இல்லை.
போதைப்பொருள் ஒழிப்பிற்கான வேலைத்திட்டங்களை வரவேற்கின்றோம். அரசாங்கம் ஆட்சியேற்ற பின்னர் தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தை முன்னெடுத்தது. தற்போது அதனைக் கைவிட்டு புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
வேலைத்திட்டங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பதற்கு அப்பால் இந்த அரசாங்கம் அனைத்துக்கும் பாரிய பிரசாரங்களை மாத்திரமே முன்னெடுக்கிறது. போதைப்பொருள் ஒழிப்பிற்கு புதிய வேலைத்திட்டங்கள் தேவையற்றவை. அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு துறைகளின் பிரதான பொறுப்புக்களில் போதைப்பொருள் ஒழிப்பும் ஒன்றாகும். எனவே ஊடகப் பிரசாரங்களை விடுத்து, வேலைத்திட்டங்களை நடைமுறையில் சாத்தியமாக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர் மீதும் போதைப்பொருள், பாதாள உலகக் குழுக்கள் உள்ளிட்ட எந்தவொரு குற்றச் செயல் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை. அரசியல் நோக்கங்களுக்காகவே அரசாங்கம் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பாதுகாப்பை நீக்கியிருக்கிறது. அரசாங்கத்தின் அரசியல் நோக்கங்களுக்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக பொலிஸார் இல்லை.
பொலிஸ் என்பது ஒட்டுமொத்த இலங்கை பிரஜைகளுக்குமானதாகும் என்பதை பொலிஸ்மா அதிபருக்கு நினைவுபடுத்துகின்றேன். எனவே ஏதோவொரு சந்தர்ப்பத்தில் தீர்மானம் எடுத்தவர்கள் அன்றி, அவற்றை நடைமுறைப்படுத்தியவர்களே அவற்றுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்றார்.
