சர்சைக்குரிய, தர்ஜமதுல் குர்ஆன் விவகாரம் உடனடியாக
முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும்!ஸவூதி அரேபிய அல்குர்ஆன் பொருள்விளக்க தமிழ் மொழிபெயர்ப்பு பிரதிகளை சுங்கத்தில் தடுத்து வைத்திருப்பது அல்லது அவற்றை திருப்பி அனுப்புவது நாட்டிற்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் விவகாரமாகும்.
2019 ஆம் ஆண்டு முஸ்லிம் பெயர்தாங்கி கூலிப்படை கொண்டு தேசவிரோத சக்திகளால் (புவி)அரசியல் உள்நோக்கங்களுக்காக அரங்கேற்றப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின் இறக்குமதியாகும் இஸ்லாமிய நூல்கள் குறித்து மீளாய்வு செய்ய ஒரு குழு நியமிக்கப்பட்டது.
அந்த மீளாய்வு குழுவின் சிபாரிசுகளின்படி சர்ச்சைக்குரிய சில வசனங்களுக்கான விளக்க அடிக்குறிப்புகள் இல்லாத அல்குர்ஆன் பொருள்விளக்க மொழிபெயர்ப்புகளும் தடைசெய்யப்பட்ட நூல்களில் உள்ளடக்கப் பட்டிருப்பதனாலும்..
உரிய முன் அனுமதிகளின்றி தனிநபர் ஒருவரால் முஸ்லிம் சமயகலாசார விவகாரப் பணிப்பாளருக்கு முகவரியிடப்பட்டு அனுப்பப் பட்டிருந்ததாலும் அவை இலங்கை சுங்கத்தினால் சுமார் ஒரு வருடகாலமாக விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது.
மதீன மாநகரில் அமைந்துள்ள அல்குர்ஆன் வெளியீடுகளுக்கான நிறுவனத்தால் சுமார் 70 உலக மொழிகளில் வருடாந்தம் சுமார் இரண்டு கோடி அல்குர்ஆன் பொருள்விளக்க மொழியாக்கங்கள் வெளியிடப்பட்டு வருவதும் அதன் தமிழ் மொழியாக்கப் பிரதிகள் 1990 ஆரம்பப் பகுதியில் இலங்கை ஜம்மியதுல் உலமா பிரமுகர்களின் மீளாய்விற்கு பின்னர் அங்கீகாரம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத் தக்கது.
அல்குர்ஆன் வசனங்களுக்கான பொருள்விளக்க மொழியாக்கங்களுக்கு புறம்பாக இலங்கையில் உள்ள அரபு இஸ்லாமிய கல்லூரிகளில் தஃப்ஸீர் விளக்கவுரைகள் கற்பிக்கப்படுவதோடு ஆங்கில தமிழ் சிங்கள மொழிகளில் அவை காலாகாலமாக வெளிவந்து கொண்டிருப்பதுவும் யாவருமறிந்த விடயங்களாகும்.
குறிப்பாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவும் பிரத்தியேகமான தமிழ் சிங்கள குர்ஆன் பொருள்விளக்க மொழியாக்கங்களை அடிக்குறிப்புகளுடன் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் இதுவரைகாலமும் இலங்கையிலும் பிறநாடுகளிலும் பரவலாக விநியோகிக்கப்பட்டு வந்த ஸவூதி அரேபிய அல்குர்ஆன் தமிழ் பொருள்விளக்க மொழியாக்க பிரதிகளை அடிக்குறிப்புகள் இல்லை என்ற ஒரே காரணத்தால் உள்வரவிடாமல் பாதுகாப்பு காரணங்களை காட்டி தடுத்து வைத்திருப்பது மிகவும் பாரதூரமான விடயமாகும்.
உலகெங்கும் அனைத்து சர்வதேச மொழிகளிலும் அல்குர்ஆன் பொருள் விளக்க மொழியாக்கங்கள் காணப்படுகின்றன, அவற்றிற்கான பல்மொழி வலைதளங்களும் தரவிறக்கம் செய்யப்பட்ட முடியுமான மென்பொருட்களும் காணப்படுகின்றன.
அவற்றை எந்தவொரு நாடும் தமது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என தடைசெய்யவுமில்லை, குறிப்பாக இதுவரை சுமார் 70 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள 400 மில்லியன் ஸவூதி அரேபிய மொழியாக்க பிரதிகள் குறித்து எந்தவொரு சர்ச்சையும் உலக அளவில் எழுந்ததாக தெரியவரவில்லை.
இலங்கையில் அனைத்து முஸ்லிம்களும் அல்குர்ஆனின் அனைத்து வசனங்களையும் பாராயணம் செய்கிறார்கள், கணிசமான தொகையினர் முழுமையாகவும் பகுதிதியாகவும் மனனம் செய்கிறார்கள், அதன் மென்பொருட்களை கையடக்க தொலைபேசிகளில் கணினிகளில் வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் குறுகிய இனமதவெறி அரசியல் உள்நோக்கங்களுடன் கூடிய பிழையான ஆலோசனைகளின் பேரில் தற்போதைய அரசு, அரச அதிகாரிகள் மற்றும் சமய கலாசார அமைச்சு, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுகள் அமைச்சு தவறாக வழிநடாத்தப்படுவது தேசத்திற்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
மேற்படி தர்ஜமா பிரதிகளை ஸவூதி அரேபியாவிற்கு திருப்பி அனுப்புவதில் உள்ள இராஜதந்திர பின்விளைவுகளை அரசு கவனத்திற் கொள்ள வேண்டும், அதேவேளை தமது தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என காரணம் கூறி அவற்றை இந்தியாவிற்கு அனுப்புவது எத்தகைய பின்விளைவுகளை சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதனையும் (குறைமதியுடைய) ஆலோசகர்கள் அதிகாரிகள் கவனத்திற் கொள்ள வேண்டும்.
எனவே, அவற்றை மேலும் தாமதிக்காது உடனடியாக சுங்கத்தில் இருந்து விடுவித்து முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் களஞ்சிய சாலையில் வைத்து, அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தயாரித்துள்ள அடிக்குறிப்புகள் பின் இணைப்புடன் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதுவே அறிவுபூர்வமான அணுகுமுறையாகும்.
இதுகுறித்த தெளிவான ஒரு அறிக்கையை 30.07.2024 அன்று நான் வெளியிட்டிருந்ததோடு என்னால் முடிந்தவரை மக்கள் பிரதிநிதிகள் சமூகத் தலைமைகள் கவனத்திற்கும் கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
குறிப்பு: மேற்படி அல்குர்ஆன் பிரதிகள், தர்ஜமா பிரதிகள் மற்றும் நூல்களை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் முன் அனுமதியுடனேயே அதன் பணிப்பாளருக்கு முகவரியிட்டு தான் அனுப்பியதாக அதனை அனுப்பியவர் தெரிவிப்பதால் பொறுப்பற்ற விதத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியவர்கள் விடயத்தில் உரிய விசாரணைகள் இடம் பெறவேண்டும் என்பதனையும் வலியுறுத்த விரும்புகிறோம்!
மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
முன்னாள் கொன்ஸல் ஜெனரல்-ஜித்தா
முன்னாள் பொதுச் செயலாளர்- தேசிய ஷூரா சபை
15.11.2025 ||SHARE
