Our Feeds


Sunday, November 16, 2025

SHAHNI RAMEES

இலங்கை தமிழரசுக் கட்சியுடன் ஜனாதிபதி இவ்வாரம் சந்திப்பு !

 


வடக்கு மற்றும் கிழக்கின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்குவதில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு வருட காலமாக எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காததால், வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. குறிப்பாக இனப் பிரச்சினை குறித்து கலந்துரையாடல் நடத்த வாய்ப்புக் கோரி ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பப்பட்டு ஆறு மாதங்களுக்கும் மேலாகியும் பதில் கடிதம் கூட அனுப்பப்படாத சூழ்நிலையில், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராகக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் ஜனாதிபதியிடம் அண்மையில் விளக்கமளித்திருந்தார்.


ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் போர் முடிவடைந்த பிறகும், மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கலந்துரையாடல்களுக்கு வாய்ப்பளித்தார். அதனாலேயே அந்தக் காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்தவின் வரவு – செலவுத்திட்டற்கு ஆதரவாக வாக்களித்தது. ஆனால் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து கலந்துரையாட ஆர்வம் செலுத்துவதாக தெரியவில்லை என்ற விடயம் நேரடியாகவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தெரிவிக்கப்பட்டது.


இதனை கருத்தில் கொண்ட ஜனாதிபதி அநுர, இலங்கை தமிழரசுக் கட்சியுடன்  விரைவில் கலந்துரையாடல் நடத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்படி, கடந்த பாராளுமன்ற அமர்வின்போது, பாராளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் தொலைபேசி மூலம் ஜனாதிபதியைத் தொடர்புகொண்டு இந்த விவகாரம் குறித்து விசாரித்தார். சில மணி நேரங்களுக்குப் பிறகு, நவம்பர் 19 அல்லது 20 ஆம் திகதிகளில் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் கலந்துரையாட ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்ற தகவல் ஜனாதிபதி செயலகம் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டது.


இதன் பிரகாரம் ஜனாதிபதிக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான சிறப்புக் கலந்துரையாடல்  புதன் அல்லது வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது. இந்தச் சந்திப்பானது, வரவு –செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்புக்கு முன்னர், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்த அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பெறுவதற்கும், அதன் மூலம் கூட்டமைப்பின் வரவு –செலவுத் திட்டத்திற்கு ஆதரவைப் பெறுவதற்கும் எடுக்கப்பட்ட அவசர இராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »