கொழும்பிலுள்ள சொகுசு ஹோட்டலொன்றில் தங்கியிருந்த டச்சு பெண்ணின் பணப்பையிலிருந்து ரூபாய் 300,000 இற்கும் அதிகமான பணத்தை திருடியதாகக் கூறப்படும் ஹோட்டல் ஊழியரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் கந்தானை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார்.
தனது பணப்பையில் இருந்த திர்ஹாம் மற்றும் யூரோ நாணயம் காணாமல் போனதாக குறித்த வெளிநாட்டுப் பெண் சுற்றுலாத்துறை பொலிஸாரிடம் முறைப்பாடளித்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் விசாரணை நடத்தியதுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை விசாரித்ததில், வெளிநாட்டுப் பெண்கள் அறையில் இல்லாதபோது திருட்டுச் சம்பவம் நடந்ததாகவும் திருடப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் ஜா-எல பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனமொன்றில் மாற்றப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (14) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
