Our Feeds


Sunday, December 21, 2025

SHAHNI RAMEES

13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிருங்கள்!

 


13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று,

நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்க வேண்டும் என்று லங்கா சமசமாஜக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.


இலங்கையின் பழமையான மற்றும் முதன்மையான இடதுசாரிக்கட்சியான லங்கா சமசமாஜக், தனது 90ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் விசேட மாநாடு நேற்று நடைபெற்றது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,


விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் முன்னெடுத்த விதாத்த  வேலைத்திட்டத்தின்; மூலம் நாடு தழுவிய ரீதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட சிறு தொழில்முயற்சியாளர்களை உருவாக்கி, நவீன தொழில்நுட்பத்தைக் கிராமங்களுக்குக் கொண்டு சேர்த்த வெற்றியின் அனுபவத்தை பெருமையோடு கூறுகிறேன்.


இவ்வாறான உற்பத்தி சார்ந்த பொருளாதார முன்னெடுப்புகளே நாட்டின் தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கும், வேலையின்மைக்கும் தீர்வாக அமைய முடியும்.



இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்காக, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவராகத் நான் முன்னெடுத்த அதிகாரப் பகிர்வுத் திட்டங்கள் இன்றும் காலாவதியாகவில்லை. 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய ஒரு அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்குவதே சமசமாஜக் கட்சியின் நீண்டகால நிலைப்பாடாகும்.


பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று 1950களிலேயே இக்கட்சி தீர்மானம் நிறைவேற்றிய வரலாற்றுத் தூரநோக்கை மீண்டும் நினைவூட்டுகின்றேன்.


தற்போதைய அரசியல் சவால்களை எதிர்கொள்ள இடதுசாரி சக்திகளின் ஒற்றுமை மிக அவசியமானது. 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பை உருவாக்குவதில் கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா ஆற்றிய வரலாற்றுப் பணியைப் போன்றே, தற்போதைய காலத்திலும் புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்க இடதுசாரிகள் கைகோர்க்க வேண்டும். 90 ஆண்டுகால அரசியல் அனுபவமும், நேர்மையும் கொண்ட லங்கா சமசமாஜக் கட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் தொடர்ந்து ஒலிக்கும் என்பதை இம்மாநாடு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »