( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினர், கைத்தொழிலாளர்கள் வங்கிகளில் பெற்றுக்கொண்ட கடன்களுக்கு எவ்வித மேலதிக அறவீடுகளும் இல்லாமல் 03 முதல் 06 மாதம் என்ற அடிப்படையில் நிவாரண காலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்றுக்கொண்ட தொழில் முயற்சியாளர்கள் வங்கிகளுடன் கலந்துரையாடி இந்த நிவாரணத்தை பெற்றுக்கொள்ள முடியும். பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறைகளை மீட்டெடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அனர்த்தத்தால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தின் போது மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துள்ளார்கள். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சிறந்த தலைமைத்துவத்தினால் தான் நாட்டின் இன நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முப்படையினரும், பொலிஸாரும், அரச அதிகாரிகளும் நெருக்கடியான நிலையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள்.
வெள்ளப்பெருக்கு ,சூறாவளி மற்றும் மண்சரிவு ஆகிய அனர்த்தங்களால் பெருமளவிலான சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிற்றுறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய சுமார் 29 ஆயிரம் தொழிற்றுறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணமளிப்பதற்கு 17ஆம் திகதி புதன்கிழமை திறைசேரி 1 பில்லியன் ரூபாவை கைத்தொழில் அமைச்சுக்கு விடுவித்துள்ளது.
முதற்கட்டமாக 9628 கைத்தொழில் துறைகளுக்கு நிதி நிவாரணமளிப்பதற்கு 150 மில்லியன் ரூபா பிரதேச செயலக பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சேத மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு நிவாரணமளிப்பதற்கு உரிய வழிக்காட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட தொழிற்றுறையினருக்கு வங்கி கட்டமைப்பின் ஊடாக ஒத்துழைப்பு மற்றும் சலுகை வழங்குவது தொடர்பில் மத்திய வங்கியின் தலையீட்டுடன் சகல வங்கி பிரதானிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.இதற்கமைய சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினர், கைத்தொழிலாளர்கள் வங்கிகளில் பெற்றுக்கொண்ட கடன்களுக்கு எவ்வித மேலதிக அறவீடுகளும் இல்லாமல் 03 முதல் 06 மாதம் என்ற அடிப்படையில் நிவாரண காலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் கடன் பெற்றுக்கொண்ட சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் வங்கிகளுடன் கலந்துரையாடி இந்த நிவாரணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறைகளை மீட்டெடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகவே எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்காமல் முடிந்தால் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
