Our Feeds


Thursday, December 11, 2025

Zameera

பாதிக்கப்பட்டவர்களின் மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்தில் 50% தள்ளுபடியை வழங்குமாறு ரவூப் ஹக்கீம், ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வேண்டுகோள்


 2025 நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக பல குடியிருப்புகள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளன.

இதையடுத்து,அவற்றால் பாதிக்கப்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்காக 2025 டிசம்பர் மாதத்திற்குரிய மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் முழு நாட்டையும் கடுமையாக பாதித்த மிகப் பெரும் பேரழிவாக இது அமைந்துள்ளதாகவும், வழங்கப்படும் நிவாரணங்களுக்கு அப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது சேதமடைந்த உடைமைகளைச் சுத்தம் செய்து சீரமைக்க அதிக அளவில் தண்ணீரும், மின்சாரமும் பயன்படுத்தப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்திலும், உள ரீதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மீண்டும் வாழ்க்கையை முன்கொண்டு செல்ல உதவும் நோக்கத்தில், 2025 டிசம்பர் மாதத்திற்குரிய நீர் மற்றும் மின்சார கட்டணங்களில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாறு, அவர் நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »