எதிர்வரும் 29 ஆம் திகதிக்குள் பேராதனை பல்கலைக்கழகத்தின் மேலும் 6 பீடங்களின் கல்வி நடவடிக்கைகளை முழுமையாக ஆரம்பிக்கவுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டபிள்யூ. எம். டி. மதுஜித் தெரிவித்தார்.
'டித்வா' புயலினால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக பேராதனை பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதன் 3 பீடங்களின் பணிகள் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
இதன்படி மருத்துவ பீடம், இணை சுகாதார விஞ்ஞான பீடம் மற்றும் பொறியியல் பீடம் என்பன பரீட்சை நடவடிக்கைகள் காரணமாக இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டதாக துணைவேந்தர் குறிப்பிட்டார்.
அத்துடன் விவசாய பீடம், கால்நடை மருத்துவ பீடம் மற்றும் பல் மருத்துவ பீடம் என்பன டிசம்பர் 29 ஆம் திகதியும், கலை பீடம் மற்றும் விஞ்ஞான பீடம் ஜனவரி 5 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அனர்த்தம் காரணமாக அதிக பாதிப்பை சந்தித்த முகாமைத்துவ பீடத்தின் ஒரு கட்டடத்திற்கு மாணவர்களை அனுப்புவது ஆபத்தானது எனவும், அது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பேராசிரியர் டபிள்யூ. எம். டி. மதுஜித் குறிப்பிட்டார்.
2024 உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், முன்னரே திட்டமிட்டபடி பெப்ரவரி 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் இங்கு கூறினார்.
அத்துடன் முகாமைத்துவ பீடத்தின் ஏனைய குழுக்களுக்கான கல்வி நடவடிக்கைகளையும் படிப்படியாக ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, இங்கு கருத்து தெரிவித்த துணைவேந்தர் கூறினார்.
புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமையால் பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்ட நேரடி சேதம் 4 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த மதிப்பீடு உயர்கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் பல்கலைக்கழகத்திற்குத் தேவையான பொருட்கள் மற்றும் நிதியுதவிகளை வழங்க யாரேனும் தனிநபரோ அல்லது குழுவோ தயாராக இருந்தால், பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அது தொடர்பான இலக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
